இந்த இந்திய வீரர் இன்னும் 10 வருடங்களில் மிக பெரிய உயரத்தை அடைவார் என பெருமிதமாக கூறியுள்ளார் ஆஸி அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடரை எதிர்கொண்டு 2-1 என்ற கணக்கில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக வெளியில் அமர்த்தப்பட்டிருந்தபோது, இளம் வீரர் ரிஷப் பண்ட் மற்றும் கேப்டன் ரஹானே இருவரும் மிகவும் சிறப்பாக ஆடி அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர்.
அதேநேரம் இருவருடன் சேர்ந்து ஷ்ரத்துல் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி தொடர்ந்து நல்ல தாக்குதலை வெளிப்படுத்தி வெற்றியையும் பெற்றது. குறிப்பாக நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் போது ஏனைய வீரர்கள் சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வர இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை நின்று வெற்றியையும் உறுதி செய்தார். இதனால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
அதன்பிறகு, இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போதும் அதே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இதன் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தற்போது மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வரும் ரிஷப் பண்ட் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
இவரின் அபாரமான ஆட்டத்தை கண்டு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் புகழாரம் சூட்டியிருக்கிறார். அவர் கூறுகையில்,
“ரிஷப் பண்ட் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் விதம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அதாவது எந்த விதமான பயமும் இல்லாமல் சிறப்பாக எதிர்கொள்கிறார். நட்சத்திர பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தும் அளவிற்கு இவரது ஆட்டம் இருக்கிறது. இவரது இந்த அதிரடியான ஆட்டம் தொடர்ந்து நீடித்தால் அடுத்த பத்து வருடங்களில் உயரிய இடத்தை பிடிப்பார். அதேபோல் சூப்பர்ஸ்டார் வீரராகவும் திகழ்வார். இந்திய அணி இவரை போதிய அளவு பயன்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து.” என்றார்.