உலகக்கோப்பை கிரிக்கெட் ஏன் சுவாரஸியம் என்றால் மிகப்பெரிய வீரர்கள், ஆகிருதிகளைத் தாண்டி அதிகம் பேசப்படாத வீரர்கள், அணிகள் செய்துள்ள சில அதிசயங்கள் எப்போதும் உற்சாகம் தருபவையே.
கிரிக்கெட்டில் சில ரெக்கார்டுகள் அதிசயிக்கத்தக்கவை. உதாரணமாகக் கூற வேண்டுமெனில் நியூஸிலாந்தின் தொடக்க வீரர் நேதன் ஆஸ்ட்ல், இவர் அதிவேக இரட்டைச் சதத்திற்கான டெஸ்ட் உலக சாதனையை இன்னமும் கையில் வைத்திருப்பவர், இங்கிலாந்துக்கு எதிராக 152 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து சாதனை புரிந்தார். ஆனால் 90களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற எதிர்மறைச் சாதனைக்கும் உரியவரனார் நேதன் ஆஸ்ட்ல்.
அது போல் உலகக்கோப்பையில் சில எண்கள் நம்மை அதிசயிக்க வைக்கும்:
124: உலகக்கோப்பையில் 124 ரன்கள் சராசரி வைத்திருந்த ஒரே வீரர் தென் ஆப்பிரிக்காவின் லான்ஸ் குளூஸ்னர். 1999 மற்றும் 2003 உலகக்கோப்பைத் தொடர்களில் குளூஸ்னர் ஆடினார். ஸுலு என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் 1999-ல் பிரமாதமாக ஆடினார். இந்த உலகக்கோப்பையில் 281 ரன்களை 140.80 என்ற சராசரியில் அவர் எடுத்திருந்தார், பந்து வீச்சில் 17 விக்கெட்டுகளுடன் 4வதாகத் திகழ்ந்தார். மொத்தமாக இவரது உ.கோப்பை பேட்டிங் சராசரி 124.