ஜூலையில் இங்கிலாந்தில் நடைபெறும் முதல் தி ஹண்ட்ரட் லீக் என்ற 100 பந்து தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்மித் வார்னர் இருவருக்கும் விலை 125,000 பவுண்டுகள் நிர்ணையிக்கப்பட்டுள்ளது, மிட்செல் ஸ்டார்க், கிறிஸ் கெய்ல், இலங்கையில் லஷித் மலிங்கா, கேகிஸோ ரபாடா ஆகியோருக்கும் இதே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமிர், நியூஸிலாந்தின் ட்ரெண்ட் போல்ட், ஆகியோர் உள்ளிட்ட பிற அயல்நாட்டு வீரர்களுக்கு 1 லட்சம் பவுண்டு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறன்று முதல் ஏலம் நடைபெறுகிறது. ஆடவர் பிரிவில் மொத்தம் 570 வீரர்கள் இதில் 239 பேர் அயல்நாட்டு வீரர்கள்.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த 100 பந்து தி ஹண்ட்ரட் தொடர் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த வடிவத்தின் முக்கிய அம்சங்கள் சில:
ஒரு இன்னிங்ஸிற்கு 100 பந்துகள் வீசப்படும்
10 பந்துகளுக்கு ஒருமுறை முனை மாற்றப்படும்.
ஒரு பவுலர் 5 அல்லது 10 பந்துகளை தொடர்ச்சியாக வீசலாம்.
எந்த பவுலராக இருந்தாலும் அதிகபட்சம் 20 பந்துகள்தான் வீச முடியும்.
பவர் ப்ளே முதல் 25 பந்துகளுக்கு இருக்கும்.
பவர் ப்ளேயில் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே 2 பீல்டர்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில்,
அபுதாபி டி10 லீகில் அறிமுகமாகவுள்ள முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடி, ஒலிம்பிக்ஸுக்கு டி10 கிரிக்கெட் தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
பரபரப்பாக, விரைவாக நடைபெறுவதால் ரசிகர்களுக்கு டி10 கிரிக்கெட் ஆட்டம் மிகவும் பிடிக்கிறது. ஆட்டமும் 90 நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. அபுதாபி டி10 லீக் போட்டி இந்த வகை கிரிக்கெட்டைப் பரிசோதிக்க சரியான களமாக இருக்கிறது. கிரிக்கெட்டை ஒலிம்பிக்ஸுக்குக் கொண்டு செல்ல டி10 ஆட்டம் உதவும்.
ஆரம்பத்தில் டி20 கிரிக்கெட்டையும் யாரும் ஏற்கவில்லை. ஆனால் இன்று டி20 உலகக் கோப்பை நடக்கிறது. எனவே எதிர்காலத்தில் அதிகமான சர்வதேச வீரர்கள் அபுதாபி டி10 லீகில் இடம்பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.
அபுதாபி டி10 லீக் போட்டி, ஐக்கிய அமீரகத்தில் நவம்பர் 14 முதல் 24 வரை நடைபெறவுள்ளது.