ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் நடந்த டெஸ்ட் தொடரில் ஆயிரம் பந்துகளுக்கு மேலாக பிடித்து சாதனை படைத்துள்ளார் புஜாரா. இதற்கு முன்னதாக சுனில் கவாஸ்கர் 1977/78, விஜய் ஹசாரே 1947/48, ராகுல் திராவிட் 2003/04, விராட் கோலி 2014 ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி வீரர் புஜாரா சதமடித்துள்ளார். இந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவர் எடுத்துள்ள 3-வது சதம் இது.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ராகுல், குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார்கள்.
தொடக்க வீரர்களாக ராகுலும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினார்கள். எதிர்பார்த்ததுபோல சந்தித்த பந்துகளைச் சிரமத்துடன் எதிர்கொண்ட ராகுல் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வாலும் புஜாராவும் பொறுப்புடன் விளையாடி ஆஸ்திரேலிய அணி மேலும் விக்கெட்டுகள் எடுக்காமல் பார்த்துக்கொண்டார்கள். மயங்க் அகர்வால் அற்புதமான ஷாட்களால் இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 15 ஓவர்களில் 51 ரன்கள் கிடைத்தன. இதனால் பவுன்சர் பந்துகள் மூலம் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினார்கள் ஆஸி. பந்துவீச்சாளர்கள். முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. அகர்வால் 42, புஜாரா 16 ரன்களில் இருந்தார்கள்.
அதன்பிறகு லயன் பந்துவீச்சில் ரன்கள் குவிக்க ஆரம்பித்தார் மயங்க் அகர்வால். அடிக்கடி கிரீஸை விட்டு வெளியே வந்து சிக்ஸ் அடிக்க முயன்றார். 96 பந்துகளில் அரைசதமெடுத்தார். லயன் பந்துவீச்சில் 2 சிக்ஸர் அடித்து மூன்றாவது சிக்ஸருக்கு முயன்றபோது ஆட்டமிழந்தார். அவர் 77 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். புஜாரா இந்த டெஸ்டிலும் பொறுப்புடன் விளையாடி 134 பந்துகளில் அரை சதமெடுத்தார். இளம் வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே வீசிய முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து அசத்தினார் புஜாரா.
இன்றைய தினம் சர்வதேச கிரிக்கெட்டில் 19,000 ரன்களைக் கடந்த விராட் கோலி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பிறகு வீசப்பட்ட முதல் ஓவரிலேயே 23 ரன்களில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 63-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது.
லயன், ஸ்டார்க் வீசிய ஓவர்களில் அடுத்தடுத்து தலா இரு பவுண்டரிகளை அடித்தார் புஜாரா. இதனால் அவர் நிச்சயம் சதமடிப்பார் என்கிற எண்ணம் இந்திய ரசிகர்களுக்கு உண்டானது. புஜாரா – ரஹானே இணைந்து 48 ரன்கள் எடுத்தபோது, நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் 18 பந்துகளில் ஆட்டமிழந்தார் ரஹானே. இந்நிலையில் 199 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார் புஜாரா.
இந்திய அணி 80 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 118, விஹாரி 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.