டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் புதிய உலகசாதனை! இதை செய்த ஒரே பந்துவீச்சாளர் இவரே..
டெஸ்ட் அரங்கில் புதிய உலகசாதனையை படைத்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னணி மற்றும் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்திருந்தார்.
2003-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆண்டர்சன் இங்கிலாந்து அணிக்காக அறிமுகம் ஆனார். சமீபத்தில் உலகக்கோப்பை முடிந்தவுடன் சில வாரங்களிலேயே நடைபெற்ற ஆஷஸ் தொடரின்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார்.
அதன்பிறகு தற்போது குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதன் மூலம் 150 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமைக்கும் சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
ஆண்டர்சனுக்கு அடுத்தபடியாக, அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில்,
இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 135 போட்டிகளில் ஆடியிருக்கிறார். இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கபில்தேவ் 131 போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் வால்ஷ் 132 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் 124 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
இந்த பட்டியலில் தற்போதுவரை ஆடி வருவது இங்கிலாந்தின் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.