கிரிக்கெட் ஆட்டங்கள் தொடங்கியது எல்லாம் சரிதான், ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களைப் பார்ப்பது, எனக்கு மிகவும் பிடித்த டி20 ஆட்டங்கள் எங்கே என்று கேட்பவரா நீங்கள்?
இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. ஆகஸ்ட் 18 முதல் வருடக் கடைசி வரை திகட்டத் திகட்ட டி20 ஆட்டங்கள் நடைபெறப் போகின்றன.
ஆகஸ்ட் 18 முதல் வரிசையாக நான்கு டி20 லீக் போட்டிகள் அடுத்தடுத்து ஆரம்பிக்கவுள்ளன. இதுதவிர சர்வதேச டி20 ஆட்டங்களும் இனி தொடர்ந்து நடைபெறவுள்ளன. இதனால் டி20 ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான்.
இந்த வருடம் வரை நடைபெறவுள்ள டி20 லீக் போட்டிகள்
சிபிஎல்: ஆகஸ்ட் 18 முதல்
டி20 பிளாஸ்ட்: ஆகஸ்ட் 27 முதல்
ஐபிஎல்: செப்டம்பர் 19 முதல்
பிக் பாஷ்: டிசம்பர் 3 முதல்
இந்தியன் பிரீமியர் லீக்கின் 2020 தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவர் பிரிஜேஷ் படேல் இன்று (ஜூலை 24) உறுதிப்படுத்தினார். IPL 13 சீசன் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் எனவும் தெரிவித்தார். ஆனாலும் IPL தொடர் நடத்துவது குறித்து அரசு தரப்பில் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் IPL 13 வது சீசன் நடைபெறுமா என்பது குறித்து பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் ஐ.சி.சி. (ICC) தரப்பில் இருந்து டி-20 ஆண்கள் உலகக்கோப்பை ஒத்தி வைக்கப்பட்டது என அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, ஐபிஎல் போட்டி குறித்து செய்திகள் இடம் பெறத்தொடங்கின.வ்