இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியால் முறியடிக்க முடியாத, ரோஹித் சர்மாவின் மூன்று முக்கிய சாதனைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு வரை இந்திய கிரிக்கெட் அணியின் கிங்காக விராட் கோலி திகழ்ந்து வந்தாலும், இந்திய அணியில் ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேனா, விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனா என்ற விவாதமும் ஒரு புறம் நடைபெற்றே வந்தது. விராட் கோலி – ரோஹித் சர்மா ஆகிய இருவருமே இதுவரை ஒரு முறை கூட ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து பேசியது இல்லை, ஆனாலும் இன்று வரை விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் என்றே பாவிக்கப்பட்டு வருகின்றனர். இருவருமே தங்களுக்குள் எந்த பிரச்சனை இல்லை என்று பல முறை ஓபனாக பேசியிருந்தாலும், இன்றுவரையிலும் விராட் கோலிக்கு எதிரியே ரோஹித் சர்மா தான் என்றே கோலியின் பெரும்பாலான ரசிகர்கள் கருதி வருகின்றனர்.
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்றுகொண்ட ரோஹித் சர்மா, இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வருவதோடு, தனது பேட்டிங்கிலும் குறை சொல்ல முடியாத அளவிற்கே செயல்பட்டு வருகிறார். பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலியோ, பேட்டிங்கில் படு மோசமாகவே செயல்பட்டு வருகிறார். டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா இல்லையா என்ற விவாதம் நடைபெறும் அளவிற்கு விராட் கோலி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ரோஹித் சர்மா – விராட் கோலி இருவருமே மிக சிறந்த பேட்ஸ்மேன்கள் தான், விராட் கோலியின் சில சாதனைகளை ரோஹித் சர்மாவால் நெருங்க கூட முடியாது, அதே போன்று ரோஹித் சர்மாவின் சில சாதனைகளை விராட் கோலியால் முறியடிக்கவே முடியாது. அந்தவகையில், விராட் கோலியால் முறியடிக்க முடியாத ரோஹித் சர்மாவின் மூன்று சாதனைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
ஒரே போட்டியில் 264 ரன்கள்;
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 264 ரன்கள் குவித்ததன் மூலமே ரோஹித் சர்மாவிற்கு “ஹிட்மேன்” என்ற பட்டமே கிடைத்தது. 173 பந்துகளில் 33 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 264 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவின் இந்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
ரோஹித் சர்மாவிற்கு முன், சேவாக் மற்றும் சச்சின் ஆகிய இருவர் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்திருந்தவர்கள். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன சேவாக் ஒரே போட்டியில் 219 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது, இதனை ரோஹித் சர்மா அசால்டாக முறியடித்தார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது சாதரண விசயம் கிடையாது, விராட் கோலியால் மட்டுமல்ல வேறு யாராலுமே ரோஹித் சர்மாவின் இந்த ஒரு சாதனையை அவ்வளவு எளிதாக முறியடித்துவிட முடியாது. ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் அதிகபட்ச ரன் 183ஆகும், ஆனால் அது 2012ம் ஆண்டு நடந்தது. தற்போது மிக மோசமான பார்மில் இருக்கும் விராட் கோலியால் ரோஹித் சர்மாவின் இந்த பெரும் சாதனையை முறியடிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.