உலக கோப்பை இறுதி போட்டியில் 3 முறை கள நடுவர்கள் தவறான முடிவுகள் கொடுத்தது அனைத்து அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலக கோப்பை தொடரில் பல பலமுறை விமர்சிக்கப்பட்ட ஒன்று அம்பையர்களின் தவறான முடிவுகள். லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில் கெயிலுக்கு ஸ்டார்க் வீசிய பந்து மிகப் பெரிய நோ-பாலாக இருந்தது. ஆனால் அதை அம்பையர்கள் கவனிக்காமல் அலட்சியமாக விட்டு விட்டனர். அது ரீபிளேவில் தெளிவாக தெரிந்தது. அதன் பிறகு இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டியில் ரோகித் சர்மாவிற்கு மூன்றாவது நடுவர் தவறான முடிவு கொடுத்தது இந்திய ரசிகர்களிடையே பெரும் கோபத்தைக் கிளப்பியது.
பின்னர் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதிய போது, சிறப்பாக ஆடி வந்து சதம் அடிக்கும் தருவாயில் இருந்த ஜேசன் ராய் தவறான முடிவு கொடுக்கப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டார். அவரிடம் ரிவியூ இல்லாத காரணத்தினால் வேறுவழியின்றி வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராய் களத்தில் அம்பையர்களிடம் மிகவும் கடுமையாகப் பேசி, அதற்க்காக அபராதம் விதிக்கப்பட்டார்.
அம்பையர்களின் இந்த தவறான முடிவுகள் லீக் மற்றும் நாக்-அவுட் போட்டிகளில் மட்டுமே முடியவில்லை. இறுதிப் போட்டியிலும் ஒருமுறை இருமுறை அல்ல.. மூன்று முறை தவறான முடிவுகள் கொடுக்கப்பட்டது.
நியூசிலாந்து துவக்க வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் ஆடிக் கொண்டிருக்கையில் அவருக்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. அவர் கேட்ட ரிவியூவில் அவுட் இல்லை என வந்ததால், கள நடுவர் முடிவு திரும்பப் பெறப்பட்டது. அதேபோல் கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்த போது பந்து பேட்டில் தெளிவாக்கப்பட்டு கீப்பரால் பிடிக்கப்பட்டது. அதற்கு கள நடுவர் அவுட் இல்லை என அறிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இங்கிலாந்து கேப்டன் மார்கன் ரிவியூ சென்றார். அப்போது கள நடுவர் முடிவை திரும்பப் பெறப்பட்டு அவுட் என கொடுக்கப்பட்டது.
மேலும் ராஸ் டெய்லர் முக்கியமான தருவாயில் ஆடிக் கொண்டிருக்கையில், அவருக்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. ஆனால் ரீபிளேவில் பார்க்கையில் அவர் அவுட் இல்லை என தெளிவாக தெரிந்தது. இருப்பினும் ரிவியூ இல்லாத காரணத்தினால் வேறு வழியின்றி இவரும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இத்தனை கேமராக்கள் தொழில்நுட்பங்கள் இருந்தும் ஏன் இவ்வளவு தரமற்ற முடிவுகளை கொடுத்து வருகின்றனர் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புகின்றனர்.