இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகல்- இரவு ஆட்டமாக நேற்று அரங்கேறியது. இந்திய அணியில் மாற்றம் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இந்திய முன்னாள் வீரர் பாபு நட்கர்னியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நமது வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்தபடி பீல்டிங் செய்ய களம் கண்டனர்.
ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சை டேவிட் வார்னரும், கேப்டன் ஆரோன் பிஞ்சும் தொடங்கினர். தடுமாற்றத்துடன் ஆரம்பித்த அதிரடி சூறாவளி வார்னர் (3 ரன்) முகமது ஷமி ஆப்-சைடுக்கு சற்று வெளியே வீசிய பந்தை அடித்த போது விக்கெட் கீப்பர் ராகுலிடம் பிடிபட்டார். 2-வது விக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் வந்தார். சிறிது நேரத்தில் ஸ்டீவன் சுமித்தின் தவறால் பிஞ்ச் (19 ரன்) விக்கெட்டை தாரைவார்க்க நேர்ந்தது. பந்தை அருகில் தட்டிவிட்ட சுமித் சில அடி தூரம் ஓடி விட்டு பிறகு வேண்டாம் என்று திரும்பினார். அதற்குள் எதிர்முனையில் நின்ற பிஞ்ச் பேட்டிங் முனைக்கு வந்து விட்டார். இதனால் ரன்-அவுட்டில் வீழ்ந்த பிஞ்ச், கோபத்துடன் வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து சுமித்தும், மார்னஸ் லபுஸ்சேனும் இணைந்து அணியை சரிவில் இருந்து நிமிர வைத்ததுடன், ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தினர். ரன்ரேட் 6-ஐ நெருங்கியது. அணிக்கு வலுவூட்டிய இந்த ஜோடி ஸ்கோர் 173 ரன்களை எட்டிய போது பிரிந்தது. லபுஸ்சேன் (54 ரன், 64 பந்து, 5 பவுண்டரி) அடித்த ஷாட்டை கோலி பாய்ந்து விழுந்து பிரமாதமாக கேட்ச் செய்தார்.
இதன் பின்னர் ஒரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் ஸ்டீவன் சுமித் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைகொண்டு விளையாடி தனது 9-வது சதத்தை பூர்த்தி செய்தார். சதத்திற்கு பிறகு வேகத்தை கூட்டிய சுமித், நவ்தீப் சைனியின் ஓவரில் பவுண்டரி, சிக்சர், பும்ராவின் பந்து வீச்சில் தொடர்ந்து 2 பவுண்டரிகள் விரட்டியடித்தார். அவர் ஆடிய விதத்தை பார்த்த போது, அந்த அணி 300 ரன்களை தொடுவது போல் சென்றது. ஆனால் 48-வது ஓவரின் முதல் பந்தை சுமித் (131 ரன், 132 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) தூக்கியடித்து கேட்ச் ஆகிப் போனார். சுமித் நடையை கட்டியதும் இறுதிகட்ட ரன்வேகத்தை இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்தினர்.
50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் சேர்த்தது. கடைசி 10 ஓவர்களில் இந்திய பவுலர்கள் 63 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். அதே சமயம் எக்ஸ்டிரா வகையில் 13 வைடு உள்பட 27 ரன்களை வாரி வழங்கினர். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் இன்னும் குறைந்திருக்கும். இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஏதுவான பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் தெறிக்கவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய ரோகித் சர்மா தனது 29-வது சதத்தை எட்டினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது 8-வது சதமாக இது பதிவானது. அணியின் ஸ்கோர் 206 ரன்களாக உயர்ந்த போது, ரோகித் சர்மா 119 ரன்களில் (128 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் இறங்கி, அதிரடி காட்டினார்.
இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய பந்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொண்டு ரன்களை திரட்டிய விராட் கோலி (89 ரன், 91 பந்து, 8 பவுண்டரி) வெற்றியை நெருங்கிய சமயத்தில், ஹேசில்வுட்டின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.
இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னுடனும் (35 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), மனிஷ் பாண்டே 8 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதையும், விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக மும்பையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இருந்தது. அந்த தோல்விக்கு இப்போது இந்தியா பழிதீர்த்துக் கொண்டது.