நம்மளோட பார்முலாவ நமக்கே காட்டீட்டானுங்க..நேதன் லயன் சுழலில் சிக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 76 ரன்கள் இலக்கு..!

இரண்டாவது இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. ஆஸி., அணியின் வெற்றிக்கு 76 ரன்கள் தேவைப்படுகிறது.

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் முதல்நாளில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, இம்முறையும் துவக்க வீரர்கள் ஏமாற்றினர். கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களுக்கும், ஷுப்மன் கில் ஐந்து ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.

ஒருமுனையில் புஜாரா மிகவும் நிதானத்துடன் நங்கூரம் போல நிலைத்து ஆடினார். மறுமுனையில் வந்த வீரர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறி இந்திய அணியை தொடர்ந்து தடுமாற்றத்தில் வைத்திருந்தனர். விராட் கோலி 13 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

வந்தவுடனே இரண்டு சிக்ஸர்கள், பவுண்டரிகள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்திய ஷ்ரேயாஸ் ஐயர், கவாஜா பிடித்த அபாரமான கேட்ச்சால் அதிர்ச்சியடைந்து வெளியேறினார். இவர் 27 பந்துகளில் 26 ரன்கள் அடித்திருந்தார்.

அடுத்து வந்த பரத் 3 ரன்கள், அஸ்வின் 16 ரன்கள் என ஆட்டமிழந்தனர். நன்றாக போராடிய புஜாரா 59 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணியின் ஸ்கோர் 155 ரன்கள் இருந்தபோது ஒன்பது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 67 ரன்கள் முன்னிலையும் பெற்றிருந்தது.

இறுதிவரை போராடிய அக்சர் பட்டேல் 15 ரன்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. இதன் மூலம் 75 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நேத்தன் லயன் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் அரங்கில் இவர் இரண்டாவது முறையாக 8 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆஸி., அணி இலக்கை எட்டி வெற்றிபெறும் பட்சத்தில், டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடிக்கும். இந்தியா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Mohamed:

This website uses cookies.