மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் அடித்துள்ளது. சுப்மன் கில் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது மற்றும் கடைசி பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் விளையாடியது. கவாஜா 180 ரன்கள், கேமரூன் கிரீன் 114 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா அணி 480 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மிகப்பெரிய ஸ்கோரை கடந்து முன்னிலை வகிப்பதற்கு முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணி. இரண்டாம் நாள் முடிவில் ரோகித் சர்மா 17 ரன்கள், சுப்மன் கில் 18 ரன்கள் அடிக்க, விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி.
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி துவக்கத்தில் நல்ல அணுகுமுறையுடன் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி 74 ரன்கள் சேர்த்தனர். துரதிஷ்டவசமாக ஆஸ்திரேலியா ஸ்பின்னர் குன்னமென் பந்தில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்தார். இவர் 35 ரன்கள் அடித்தார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் அரைசதம் கடந்து தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவர் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்தார். தற்போது அவற்றை மாற்றியமைக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை இதுவரை நன்றாக பயன்படுத்தி வருகிறார்.
ரோகித் சர்மா ஆட்டமிழந்த பிறகு, கில்லுடன் சேர்ந்து விளையாடி வரும் புஜாரா வழக்கம்போல நங்கூரமான ஆட்டத்தை ஆடி வருகிறார். உணவு இடைவேளைக்கு முன்பு வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் அடித்திருந்தது இந்தியா. துவக்க வீரர் சுப்மன் கில் 65 ரன்கள் அடித்து களத்தில் நிற்கிறார். புஜாரா 22 ரன்கள் உடன் இருக்கிறார். ஆஸ்திரேலியா அணி சார்பில் குன்னமென் மட்டுமே விக்கெட் வீழ்த்தி இருந்தார். தற்போது வரை இந்திய அணி 351 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
இந்த இன்னிங்ஸில் ரோகித் சர்மா 21 ரன்கள் எட்டியபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை பூர்த்தி செய்திருக்கிறார். இந்த மைல்கல்லை அடைந்த ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.