ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ஆஸி. கேப்டனும் தொடக்க வீரருமான ஆரோன் ஃபிஞ்ச் 76 பந்துகளில் 172 ரன்கள் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஹராரேவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினார்கள் தொடக்க வீரர்களான ஆரோன் ஃபிஞ்சும் ஷார்ட்டும். முதல் 6 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளத்தை உருவாக்கினார்கள். 22 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ஃபிஞ்ச். சிக்ஸரும் பவுண்டரிகளும் தொடர்ந்து விளாசியதால் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 106 ரன்கள் எட்டியது ஆஸி. அணி. பிறகு 50 பந்துகளில் சதத்தை எட்டினார் ஃபிஞ்ச். அப்போது ஆஸி. அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்திருந்தது.
இதற்கு முன்பு முதல் விக்கெட்டுக்கு கப்திலும் வில்லியம்சனும் 171 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அதை இருவரும் 16-வது ஓவரில் தாண்டினார்கள். இதன்பிறகு 18-வது ஓவரின் முடிவில் டி20 கிரிக்கெட்டின் முதல் 200 ரன்கள் கூட்டணி என்கிற சாதனையை இருவரும் நிகழ்த்தினார்கள்.
69 பந்துகளில் 150 ரன்களை எட்டினார் ஃபிஞ்ச். பிறகு அதிகபட்ச தனிநபர் டி20 ரன்கள் என்கிற சாதனையையும் நிகழ்த்தினார். இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக ஃபிஞ்ச் 156 ரன்கள் எடுத்திருந்தார். அதை இன்று தாண்டினார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. ஃபிஞ்ச் 76 பந்துகளில் 10 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 176 ரன்கள் எடுத்தார். ஷார்ட் 46 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 5 டி20 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
1. சர்வதேச டி20 ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த கூட்டணி ( ஃபிஞ்ச் – ஷார்ட் 223 ரன்கள்)
2. அதிக தனிநபர் டி20 ரன்கள் ( ஃபிஞ்ச் – 172 ரன்கள்)
3. டி20 ஆட்டத்தில் அதிகப் பந்துகளை (ஃபிஞ்ச் – ஷார்ட் 116 பந்துகள்) எதிர்கொண்ட கூட்டணி
4. ஒரு டி20 இன்னிங்ஸில் அணியின் ஸ்கோரில் அதிக சதவிகித ரன்களை எடுத்த பேட்ஸ்மேன் (229 ரன்களில் 172 ரன்கள் எடுத்தார் ஃபிஞ்ச். 75.11%)
5. டி20 இன்னிங்ஸில் அதிக தனிநபர் பவுண்டரிகள் ( ஃபிஞ்ச் – 16 பவுண்டரிகள்).
இதையடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டும் எடுத்தது. இதையடுத்து 100 ரன்கள் வித்தியாத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. இது அந்த அணியின் மிகப்பெரிய டி20 வெற்றியாகும்.