12 அணிகள் பங்குபெறும் இந்த வருட 50-ஓவர் உலகக்கோப்பையில் செமி பைனல் மற்றும் பைனல் போட்டிகள் எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது என்கிற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஐசிசி நடத்தும் ஆண்களுக்கான 50-ஓவர் உலகக்கோப்பை இந்த வருடம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. 13வது எடிசன் உலகக்கோப்பையை நான்காவது முறையாக இந்தாண்டு இந்தியா எடுத்து நடத்துகிறது. முன்னதாக, 1987, 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 2011ல் இந்தியாவில் நடக்குதா உலககோப்பையை இந்தியா வென்றது. அதன்பின் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய அணி எந்தவித ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்கிற சோகம் நீடித்து வருகிறது. இம்முறை இந்தியாவில் நடப்பதால் கட்டாயம் அதை வென்றாக வேண்டும் என்கிற முனைப்பில் இந்திய அணி நிர்வாகம் பல திட்டங்களையும் வகுத்து வருகிறது.
அக்டோபர் 5ஆம் தேதி இந்த வருடம் உலகக்கோப்பை துவங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்குபெறுகின்றன. 42 போட்டிகள் நடத்தப்படுகிறது. 12 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடக்கிறது. ஒவ்வொரு மைதானத்திலும் தலா நான்கு போட்டிகள் நடக்கும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டு வருகிறது.
அதில், இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் என்பது முன்னமே உறுதியானது. 2011ல் உலகக்கோப்பை இறுதிபோட்டி நடத்தப்பட்ட மும்பையில் உள்ள வான்கடெ மைதானத்தில் இம்முறை அரையிறுதி போட்டி நடக்கிறது.
50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்னதாக 50-ஓவர் ஆசியக் கோப்பை நடக்கிறது. இந்த வருடம் பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணியினர் அங்கு சென்று பங்கேற்கமாட்டர். அதற்கு பதிலாக பொது இடத்தில் நடத்தினால் மட்டுமே பங்கேற்போம் என்றும் பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்தது. முன்னதாக முரண்டுபிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பின்னர் ஒப்புக்கொண்டது.
இந்திய அணி மோதும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் நடத்தப்படும். இறுதிப் போட்டிக்கு இந்தியா-பாகிஸ்தான் வந்தால், அந்த போட்டியும் பொது மைதானத்திலேயே நடத்தப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கு எதிரொலியாக இந்தியாவில் நடைபெறும் 50-ஓவர் உலகக்கோப்பையில் அங்கே வந்து விளையாடமாட்டோம் என்று பாகிஸ்தான் அணியினர் தெரிவித்தனர். பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் பொது இடத்தில் நடத்துகிறோம், அதற்கேற்ற வசதிகள் அனைத்தையும் செய்து தருகிறோம் என்று பிசிசிஐ தெரிவித்தது.
வங்கதேசம் அல்லது ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பாகிஸ்தான் அணி மோதும் போட்டிகள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.