2019 உலகக்கோப்பை ஆடியே தீறுவேன் என 6 மாதங்களுக்கு முன்னர் கூட என்னிடம் கூறினார்- ஏபிடி குறித்து முன்னால் கோச் ஆலன் டொனால்ட் உருக்கம்

தென் ஆப்பிரிக்காவின், உலகின் தலைசிறந்த வீர்ர் ஏ.பி.டிவில்லியர்ஸ் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இனி இப்படிப்பட்ட 360டிகிரி சுற்றி சுற்றி அடிக்கும் வீரரைக் காண்பது அரிது. இவரது பீல்டிங், அணுகுமுறை, விக்கெட் கீப்பிங் பொறுப்பையும் ஏற்ற பெருந்தன்மை ஆகியவை டிவில்லியர்ஸை நிகரற்ற ஒரு வீரராகவே கருதத் தோன்றுகிறது.

இந்நிலையில் ஆலன் டொனால்ட் ஸ்கை ஸ்போர்ட்ஸில் கூறியதாவது:

6 மாதங்களுக்கு முன்பாகக்கூட ஏ.பி.டிவில்லியர்சிடம் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது கூட உலகக்கோப்பையில் ஆடியே தீருவேன் என்று பிடிவாதமாகவே இருந்தார்.

அதனால் தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு என்று நான் நினைத்தேன். இப்போதுகூட தென் ஆப்பிரிக்க அணி வெல்லும் அணிகள் பட்டியலில் முக்கிய அணியாகும், ஆனால் ஏ.பி.டிவில்லியர்ஸ் இல்லாமல் கஷ்டம், அவர் இருந்திருந்தால் பெரிய வாய்ப்பு.

ஆனால் ஏ.பி.டிவில்லியர்ஸின் முடிவை நான் மதிக்கிறேன். தான் களைப்படைந்து விட்டதாக அவர் கூறினார். அவரது குடும்பம் இளம் குடும்பமாகும். அதனால் ஒருவேளை குடும்பம் முக்கியம் என்று அவர் நினைத்திருக்கலாம். எங்கள் அனைவருக்குமே இப்படி நடந்துள்ளது, எனவே அவரது முடிவை மதிக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு அவர் அள்ளிக்கொடுத்தது ஏராளம், தன் மட்டையின் மூலம் ஏகப்பட்ட போட்டிகளை அவர் வென்று கொடுத்துள்ளார். அவரது அபாரத்திறமை, அந்த அனாயாச மட்டையடி, அவரது ஸ்டைல் ஆகியவற்றை இழக்கிறோம்.

ஆனால் அவர் எடுத்த முடிவு பெரிய அளவில் தன்னலமற்ற முடிவாகும். அவர் தலை நிமிர்த்தி நடக்கலாம், உச்சபட்ச பார்மில் இருக்கும் போது ஓய்வு பெற்றுள்ளார். ஆட்டத்தில் ஒவ்வொன்றையும் அவர் சாதித்து விட்டார்.

 

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி என்றாலே ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவர்களது ஆக்ரோஷமான பீல்டிங்தான். அதில் புகழ்பெற்ற ஜான்டி ரோட்ஸ் ஓய்வுபெற்ற பிறகு, அவரது இடத்தை நிரப்பியவர் டிவில்லியர்ஸ்.

அதற்கு சான்று அண்மையில் நிறைவடைந்த ஐ.பி.எல். போட்டியில் பவுண்டரி லைனில் ஒரு மீட்டர் உயரத்துக்கு துள்ளி அவர் பிடித்த கேட்ச். தென் ஆப்ரிக்க ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக ரசிகர்களையே வசப்படுத்திய டிவில்லியர்ஸின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தமே. சமீபகாலமாக காயங்களால் அவதிப்பட்டு வந்த டிவில்லியர்ஸ், நெடுநாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்து அசத்தினார்.

தென் ஆப்ரிக்காவின் விக்கெட் கீப்பராக இருந்த மார்க் பவுச்சர் ஒரு விபத்து காரணமாக கிரிக்கெட்லிருந்து விலகிய நிலையில், அணிக்குள் காலடி வைத்த டிவில்லியர்ஸ், ஒரு சிறந்த விக்கெட் கீப்பராகவும் பரிணமித்தார்.

தனது புதுவிதமான ஷாட்களால் மைதானத்தின் எந்த பகுதிக்கும் பந்தை தூக்கி அடிக்கும் வல்லமை படைத்தவர் டிவில்லியர்ஸ். குறிப்பாக விக்கெட் கீப்பர் தலைக்கு மேலே அவர் அடிக்கும் சிக்ஸர்கள் உலக பிரசித்தம். இதனாலேயே ரசிகர்களால் மிஸ்டர் 360 என கொண்டாடப்பட்டார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ள ஏபிடி, பல சாதனைகளுக்கும் சொந்தகாரர்.

அதுவும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஜோகனஸ்பர்க் நகரில் அவர் ஆடிய ரூத்ரதாண்டவம் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் விருந்து. 31 பந்துகளில் அவர் விளாசிய சதம் இன்றளவும் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. ஒரு நாள் போட்டிகளில் ஏபிடி 16 பந்துகளில் விளாசிய அரை சதமும், 64 பந்துகளில் விளாசிய 150 ரன்களும் இன்றும் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

ஒரு நாள் போட்டியில் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார் மிஸ்டர் 360. உலகிலேயே அதிக அளவு பந்து பவுன்ஸ் ஆகும் ஆடுகளமான ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 2008-ல் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்ரிக்கா வெல்வதற்கு பெரிதும் உதவி புரிந்தார். 414 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்ரிக்கா விளையாடிய நிலையில் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அணியை கரைசேர்த்தார். இப்போட்டியில் டிவில்லியர்ஸ் பிடித்த 4 கேட்ச்களும் மிக பிரசித்தம்.

Editor:

This website uses cookies.