குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்ததன் மூலம் சாதனை படைத்துள்ளார் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி. டெல்லி அணிக்கெதிராக அவர் இன்றைய போட்டியில் 41 ரன்கள் விளாசினார். இதன் மூலம் டெல்லி அணிக்கு எதிராக மட்டும் 800 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரெய்னா மும்பைக்கு எதிராக 800 ரன் எடுத்திருந்தார். தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது.
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஐ.பி.எல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
ஏற்கனவே பெங்களூர் அணி 5 போட்டிகளில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசியில் உள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இன்றும் தோற்றால் அந்த மேலும் பரிதாப நிலையை அடைந்துவிடும். இருப்பினும் சொந்த மைதானம் என்பதால் அந்த அணி சற்று பலத்துடன் இருக்கும்.
அதே சமயம் டெல்லி அணியும் இன்றைய போட்டியில் வென்று தரவரிசை முதல் இரண்டு இடங்களுக்குள் செல்ல நினைக்கிறது. கடந்த போட்டியில் பெங்களூர் அணி ஃபீல்டிங்கில் சொதப்பியதால், இந்த முறை அந்த தவறு நடைபெறாமல் இருக்க தீவிர பயிற்சி எடுத்துள்ளது. டெல்லி அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.
அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்தீவ் படேல் – கேப்டன் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். பார்த்தீவ் (9), டி வில்லியர்ஸ் (17), மார்கஸ் ஸ்டோயினிஸ் (15) ஆகியோர் விரைவில் வெளியேறினர். அடுத்து வந்த மொயின் அலி அதிரடியாக 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பொறுப்புடன் விளையாடிய கோலி 33 பந்துகளில் 41 ரன்களில் எடுத்து அவுட்டானார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.