தோனி எப்படிப்பட்ட ப்ளேயர் என யாரிடம் கேட்டாலும் எல்லோரும் சொல்லும் ஒரே வார்த்தை அவர் அதிரடியான ஆட்டக்காரர். பந்தை சிதற விடுவார் நாலா புறமும் தெறிக்க விடுவார். ஹெலிகாப்டர் ஷாட் அவர் மட்டும்தான் அடிப்பார். இப்படிதான் எல்லாரும் தோனியை பற்றி சொல்வார்கள். எல்லோருக்கும் பிடித்த தோனியும் அப்படித்தான். ஆனால் தோனியால் டிராவிட் போலவோ, சச்சின் போலவோ கவர் டிரைவ், லெக் கிளான்ஸ் ஆகியவற்றை விளையாடமாட்டார் என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் காலம்காலமாக அவர் மீது வைத்து வரும் குற்றச்சாட்டுகள்.
டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாரம்பரியமான கிரிக்கெட் ஷாட்டுகளை ஆடுவதற்கு ஒரு வீரர் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதனால்தான் டெஸ்ட் போட்டிகளில் தோனியால் மிகப்பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை என்ற சர்ச்சை இப்போதும் எழுந்து வருகிறது. இதனால்தான் 2015 ஆம் ஆண்டுடன் டெஸ்ட் போட்டிகளுக்கு தோனி முழுக்குப் போட்டுவிட்டார் என்று விமர்சனம் முன் வைக்கப்பட்டது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஓய்வு அறிவிப்பை வீரர் அறிவிக்காமல், கிரிக்கெட் வாரியம் அறிவித்தது, இது பெரும் சர்ச்சையானது.
2015 இல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. அப்போதுதான் பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டது. 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையையும், ஓய்வுப்பெறும் போது அளிக்கப்படும் பிரிவு உபச்சார கொண்டாட்டமும் இன்றி தோனி தனது டெஸ்ட் வாழ்க்கையிலிருந்து விலகினார். தோனியின் டெஸ்ட் பயணத்தின் முடிவு பல்வேறு கேள்விகளுக்கு தொடக்கமாகவே அமைந்துள்ளது. இந்த முடிவுக்கு தோனி தள்ளப்பட்டாரா அல்லது விரும்பி எடுத்த முடிவா ? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களும் எழுப்பின.
தோனி கேப்டனானதும் தனிப்பட்ட சில முடிவுகளில் மிகவும் தீர்க்கமாக இருந்தார். அதில் மிக முக்கியமாக பீல்டிங்கிலும், ரன்னிங் பிட்வீன் தி விக்கெட்ஸில் சிறப்பாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அணி தேர்வாளர்களிடம் கேட்டுக்கொண்டார். இதன் அடிப்படையில் பல்வேறு சீனியர் வீரர்கள் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டனர் அல்லது ஓரம் கட்டப்பட்டனர். அதேபோல ஒரு வீரர் ஃபார்மில் இல்லை என்றால் அது சீனியராக இருந்தாலும் தயவு தாட்சண்யமே அவர் காட்டவில்லை.
தோனியின் இந்தப் பிடிவாதத்தின் காரணமாக கடைசி வரை தப்பியவர் சச்சின் மட்டுமே. தோனி கேப்டன் ஆனதும் விரேந்திர சேவாக், கவுதம் காம்பீர், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், ஆ.பி.சிங் என பலரையும் சொல்லலாம். இது வீரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் சர்சையும் ஏற்படுத்தியது. மேலும் யுவராஜ் சிங்கும் தோனியும் மிகச் சிறந்த நண்பர்கள். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பினார் யுவராஜ் சிங். ஆனால் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் அவ்வப்போது சொதப்பியதால் ஓரங்கட்டப்பட்டார்.
யுவராஜூக்கு வாய்ப்பு அளிக்கப்படாததற்கு தோனிதான் காரணம் என்று கூறியது மட்டுமி்ல்லாமல் பல்வேறு வசவுகளை அள்ளி வீசினார் தந்தை யோக்ராஜ் சிங். ஏன் கம்பீர் கூட அவ்வப்போது சர்சைக்குறிய ட்வீட்டுகளை பதிவிட்டு வந்தார். 2015 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை வரை இந்தியா சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடி வந்தது. ஆனால் அதன் பின்பு இந்திய அணி சில தோல்விகளை தோனி தலைமையிலான அணி சந்தித்தது.
இதனால் தோனிக்கு பிரஷர் கூடியது, பல்வேறு முன்னணி வீரர்களும் தோனியை குறிவைத்தனர். இதனால் பல்வேறு கட்ட யோசனைகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து கோப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்பு விரட் கோலி கேப்டனானார். அப்போது சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் தடை இருந்ததால் புனே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி. அதன் பின்பு தோனியை அவமானப்படுத்துவது போல ஆஸி வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக்கியது.
மேலும் தோனியை அந்த அணியின் உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா அவ்வப்போது ட்விட்டரில் அவமதித்து வந்தார். பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இப்போதும் தோனியின் பேட்டிங் ஃபார்ம் விமர்சனங்களும் சர்ச்சைகளும் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், தன் மீது எழும் எந்தவொரு சர்சைக்கும் அவர் நேரடியான பதில்களை இதுவரை சொன்னதில்லை. ஆனால் தன்னுடைய விளையாட்டுத் திறன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பேட்டிங் மூலம் பதிலளித்துள்ளார் தோனி. இது அவரது ரசிகர்களுக்கு தெரியும்.