எல்லாம் நமக்கு சாதகமா தான் இருக்கு; கங்குலி சொல்கிறார்
இருபது வருஷத்துக்கு மேலாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன், ஆனால் இங்கிலாந்தில் இப்படி ஒரு கடுமையான சுட்டெரிக்கும் வெயிலை பார்த்ததே இல்லை என முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதலில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
இதையடுத்து இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்ஹாமில் துவங்குகிறது.
இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, கடந்த 20-22 ஆண்டுகளில் இங்கிலாந்தில் இல்லாத அளவில் கடும் வெயில் நிலவுவதாக தெரிவித்துள்ளார். இது இந்தியாவுக்கு சாதகம் என்றும், இங்கிலாந்துக்கு பாதகம் என்றும் கங்குலி கணித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில், ‘ இந்த ஆண்டு கடந்த 20-22 ஆண்டுகளில் இல்லாத அளவு இங்கிலாந்தில் கடுமையான வெயில் நிலவுகிறது. இது இங்கிலாந்து ஆடுகளத்தின் தன்மையை மாற்றிவிடும். இது பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட வாய்ப்பு உள்ளது. இது இந்திய வீரர்களுக்கு சாதகமான விஷயம். ஆனால் இங்கிலாந்துக்கு நல்ல விஷயமல்ல.’ என்றார்.