இந்த 3 வீரர்களுக்கும் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டது. இனி புதிய வீரர்களை உள்ளே கொண்டுவர வேண்டுமென ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிவிடும் என எதிர் பார்த்தபோது, துரதிஸ்டவசமாக 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியை இந்திய அணி ஒரே மாதிரியான தவறை செய்து தொடரை இழந்திருக்கிறது.
தோல்விக்கு முழுமுதற் காரணம் பேட்ஸ்மேன்கள் மட்டுமே என போட்டி முடிந்த பிறகு கொடுத்த பேட்டியில் விராத் கோலி தெளிவாக குறிப்பிட்டிருந்தார். பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசிய போதும் குறைந்த ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டதால் தென்ஆப்பிரிக்க அணி நம்பிக்கையுடன் விளையாடி வெற்றியைக் குவித்தது.
இந்த தொடரில் ரகானே மற்றும் புஜாரா இருவரும் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகினர். அவர்களுக்கு போதுமான அளவைவிட அதிகமாக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் தங்களை நிரூபிக்காமல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என முன்னணி வீரர்கள் பலர் விமர்சனத்தை முன்வைத்தனர்.
இதற்கிடையில் ரஹானே மற்றும் புஜாரா மீது விமர்சனத்தை வைத்ததோடு மட்டுமல்லாமல், மயங்க் அகர்வால் மீதும் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் ஹர்பஜன்சிங். அவர் அளித்த பேட்டியில்,
“மயங்க் அகர்வால் இந்த தொடரில் நன்றாக முதல் போட்டியை விளையாடினார். ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஆறு இன்னிங்ஸ்களில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆகையால் சுப்மன் கில் அல்லது பிரித்வி ஷா ஆகிய இருவரில் ஒருவரை உள்ளே கொண்டு வரும் தருணம் இது.” என்றார்.
மேலும் ரகானே மற்றும் புஜாரா பற்றி பேசிய அவர், “மிடில் ஆர்டரில் மூத்த வீரர்களான ரகானே மற்றும் புஜாரா ஒரு இன்னிங்சில் மட்டுமே எதிர்பார்த்த அளவிற்கு விளையாடினர். மீதமுள்ள இன்னிங்ஸ்களில் மிகவும் சொதப்பலாக விளையாடியதால் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் போதுமான அளவைவிட அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டது. இனியும் கொடுப்பது சரியாக இருக்காது. அணியின் எதிர்காலத்தை பாதித்து விடும். ஆகையால் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இளம் வீரர்களை உள்ளே எடுத்து வருவதற்கான சரியான நேரம் இதுதான். அடுத்தடுத்த தொடர்களில் இவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.” ,என்றார்.