இந்திய அணி இதுபோன்ற தவறை தொடர்ந்து செய்து வருகிறது என கடுமையாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
தென்னாப்பிரிக்கா உடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 272 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்தது. ஆனால் முதல் இன்னிங்சில் 327 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. கடைசி 7 விக்கெட்டுகளை வெறும் 55 ரன்களுக்குள் இழந்தது.
முன்னதாக அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெறும் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியுடன் லீட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் 78 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியிடம் இங்கிலாந்து அணி வெறும் 68 ரன்ங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்படி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீக்கிரம் ஆட்டமிழந்த போது, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அதனை சரி செய்யாமல் விக்கெட்டை இழப்பதால் சொற்ப ரன்களுக்கு மொத்த அணியும் ஆட்டமிழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய தவறை சுட்டிக் காட்டிப் பேசிய ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “தென்னாப்பிரிக்காவில் 55 ரன்களுக்குள் 7 விக்கெட். அடிலெய்ட் மைதானத்தில் 36 மற்றும் லீட்ஸ் மைதானத்தில் 78 ரன்கள் என சொற்ப ரன்களுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக ஆட்டம் இழந்து விடுகின்றனர். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடமும், நியூசிலாந்து அணி இந்தியா அணியிடமும் இதே போன்று மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இப்படி முன்னணி அணிகள் 100 ரன்களுக்கும் குறைவாக ஒரு இன்னிங்சில் ஆட்டம் இழப்பது அணிக்கு ஆரோக்கியமானது அல்ல.
மற்ற அணிகள் ஒருபுறம் இருந்தாலும், இந்திய அணி இதனை விரைவில் சரி செய்தாக வேண்டும். பேட்டிங் பயிற்சியாளர் இதனை கவனத்தில் கொண்டு இனியும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்திய அணி நம்பர் ஒன் அணியாக இருந்திருக்கிறது. தற்போதும் அதற்கு தகுதியான அணி தான், ஆகையால் சிறிய தவறு கூட பொறுத்துக் கொள்ள முடியாது.” என்றார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. முதல் இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுகள் இழந்தாலும், தென்னாப்பிரிக்க அணியை 197 ரன்களுக்குள் சுருட்டி 130 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. தற்போது நான்காவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.