விராட் கோலியை விட கேஎல் ராகுல் நன்றாக விளையாடி வருவதற்கு காரணம் இது தான் என்று ஆகாஷ் சோப்ரா விவரித்துள்ளார்.
நடைபெற்று வரும் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமனில் இருக்கின்றன. மூன்றாவது போட்டி வருகிற 11-ஆம் தேதி கேப் டவுன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
தென்னாபிரிக்கா உடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே மற்றும் விராட் கோலி ஆகியோர் எளிதாக தங்களது விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்து வெளியேறுகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோலி இரண்டு இன்னிங்சிலும் ஒரே மாதிரியாக விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
புஜாரா மற்றும் ரகானே இருவரும் தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். 2வது டெஸ்ட் போட்டியின்போது, 2வது இன்னிங்சில், சற்று ஆட்டத்தின் போக்கை மாற்றி புஜாரா மற்றும் ரஹானே இருவரும் அரைசதம் அடித்தனர். மீண்டும் பார்முக்கு வந்துள்ளனர்.
ஆனால் துவக்க வீரராக இரண்டு போட்டிகளிலும் மிகவும் நிதானமாக விளையாடி, முதல் டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்து வருகிறார். விராட் கோலியை விட கேஎல் ராகுல் இந்த தொடரில் மிகச் சிறப்பாகக் விளையாடி வருவதற்கு இது தான் காரணம் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
“கேஎல் ராகுல் எத்தனை அனுபவத்தை பெற்றிருக்கிறார் என தென்னாப்பிரிக்கா தொடரின்போது காணமுடிகிறது. முன்பு போல் இல்லாமல் நிதானம், அமைதி என அனைத்திலும் முன்னேறி இருக்கிறார். அதேபோல் எந்த பந்தை சரியாக விளையாட வேண்டும், எதை விட்டுவிட வேண்டும் என்று நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.
இவர் விராட் கோலியை விட இந்த தொடரில் நன்றாக விளையாடுவதற்கு காரணம், எங்கு ஆப்-ஸ்டம்ப் இருக்கிறது என்று புரிந்து வைத்திருப்பது தான். நிறைய பந்துகளை அடிக்கவேண்டும் என்கிற எண்ணம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் அனைத்தையும் கட்டுப்படுத்தி விளையாடும் போது தான் டெஸ்ட் போட்டிகளில் நிறைய ரன்கள் அடிக்க முடியும். கேஎல் ராகுல் இதை சரியாக புரிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்.” என புகழாரம் சூட்டினார்.