முன்னாள் பேட்ஸ்மேன் ஆமர் சோஹைல், 1999 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஷாகித் அப்ரிடியை சேர்ப்பதில் அணி நிர்வாகம் தவறு செய்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். பந்து வீசவோ அல்லது பேட்டிங் செய்யவோ முடியாத நிலையில் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி இருந்தார் என்றும் கூறினார்.
1998 ஆம் ஆண்டில் 6 டெஸ்ட் போட்டிகளிலும், 1996 மற்றும் 1998 க்கு இடையில் 22 ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தானுக்குத் தலைமை தாங்கிய ஆமர் சோஹைல், உலகக் கோப்பைக்கான தொடக்க ஆட்டக்காரராக முகமது யூசுப்பை தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் நிர்வாகம் அப்ரிடியைத் தேர்வு செய்தது என்றும் கூறியுள்ளார்.
“1998 இல் நான் கேப்டனாக இருந்தபோது, உலகக் கோப்பைக்கான வழக்கமான தொடக்க ஆட்டக்காரர்களை நாம் அணியில் கொண்டிருக்க வேண்டும் என்று தேர்வாளர்களுடன் முடிவு செய்தோம்.
துரதிர்ஷ்டவசமாக, ஷாகித் அப்ரிடியைத் தேர்வு செய்தார்கள். அவர் சிறப்பாக விளையாடக்கூடியவர் தான், மேலும் பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார். ஆனால் அந்தத் தொடரில் அவரால் பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியவில்லை. வாசிம் அக்ரமுக்கு பதிலாக நான் கேப்டனாக இருந்திருந்தால், முகமது யூசுப்பை நான் தேர்ந்தெடுத்திருப்பேன்” என்று ஆமர் சோஹைல் கூறியுள்ளார்.
1999 உலகக் கோப்பையில் அப்ரிடி ஒரு மோசமான வீரராக இருந்தார். 7 இன்னிங்ஸில் 93 ரன்கள் மட்டுமே அடித்து 13.28 என்ற குறைந்த சராசரியை பெற்றார். 1999 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டிய போதிலும், பாக்கிஸ்தான் ஒரு ‘உள்ளூர் அணி’ போல விளையாடியதாக சோஹைல் கருதுகிறார். மேலும் நிர்வாகம் அவர்களின் முடிவில் இன்னும் கொஞ்சம் மாற்றாம் செய்திருந்தால் மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், “என்னைப் பொறுத்தவரை உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் இழப்புக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அணியில் தேர்வு சரியாக இல்லை, மற்றொன்று டாஸில் வென்ற பிறகு பேட்டிங்கை தேர்வு செய்தது.
எனது கிரிக்கெட் அனுபவத்திலிருந்தும் எனது பார்வையிலிருந்தும் சொல்கிறேன், நாங்கள் ஒரு உள்ளூர் அணியைப் போலவே முழு உலகக் கோப்பையையும் விளையாடினோம். பேட்டிங் ஆர்டர்களை மாற்றுவதன் மூலம் ஒரு போட்டியில் ஒரு வரிசையும், அடுத்த போட்டியில் வேறு வரிசையும் இருந்தது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னர், லண்டனில் மழை பெய்தது. டாஸ் வென்ற பிறகு முதலில் பேட்டிங் செய்ய வேண்டாம், இல்லையென்றால் நாம் மிகவும் சிரமப்படுவோம் என்று வாசிம் அக்ரமிடம் சொன்னதாக சலீம் மாலிக் என்னிடம் கூறினார்.
இதையடுத்து டாஸ் வென்ற பிறகு நிச்சயமாக நாங்கள் முதலில் பந்து வீசுவோம் என்று வாசிம் அக்ரம் கூறியதாக சலீம் மாலிக் என்னிடம் கூறினார். அந்த நேரத்தில் எங்கள் பந்துவீச்சு சிறப்பாக செயல்பட்டு இருந்திருந்தால், எதிரணியினரை கட்டுப்படுத்தி, எங்கள் பேட்ஸ்மேன்களின் நம்பிக்கையை உயர்த்தியிருக்க முடியும்” என்று பேசியுள்ளார்.