ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் தொடரில் ஆடிய இந்திய அணி தொடரை 2-3 என இழந்துள்ளது. தொடரை இழப்பிற்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்சுக்கு எம் எஸ் தோனி மற்றும் விராட் கோலி இருவரும் ஒரு ஆச்சரியமூட்டும் பரிசினை கொடுத்துள்ளனர். இது குறித்து மனம் திறக்கிறார் ஆரோன் பின்ச்.
கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தபோது 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதின. இதில் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை ஆதிக்கம் செலுத்தி வென்றது. இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்றது. ஆனால் சற்றும் மனம் தளராத ஆஸ்திரேலிய அணி அடுத்து நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று 3 – 2 என்ற கணக்கில் தொடரை வென்றது.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக இந்த தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடர்களில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. காரணம், அணியின் முக்கிய வீரர்களாக திகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக ஒரு வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டனர். இது ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பெரும் பின்னடைவாக அமைந்தது.
அதன் பிறகு டி20 போட்டிகளில் தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருந்து வந்த ஆரோன் பின்ச் ஒருநாள் போட்டியிலும் கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பின்ச், இந்திய அணிக்கு எதிராக தொடரை வென்றது அவரது கேப்டன் பொறுப்பில் பெற்ற முதல் வெற்றி.
இதற்கிடையில் கிரிக்கெட் ஒரு மகத்தான விளையாட்டு என்பதை இந்திய அணியின் இந்நாள் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இருவரும் நிரூபித்துள்ளனர்.
தொடரை இழந்த பிறகு இருவரும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்சுக்கு தங்களது ஜெர்சியை பரிசு அளித்துள்ளனர். மேலும் அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து கிடைத்த முதல் தொடர் வெற்றிக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார் ஆரோன் பின்ச்.