உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதின. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் வார்னர், கேடன் ஆரோன் பின்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வார்னர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்ச் தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். கவாஜா 10 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்ச் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து விளையாடினர். ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் உயர்ந்தது.
மார்ஷ் 3, கேரே 4, கம்மிங்ஸ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகள் போனது. மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது.கேப்டன் பின்ச் அபாரமாக ஆடி, 5 சிக்ஸர், 15 பவுண்டரியுடன் 132 பந்துகளில் 153 ரன்களை விளாசி, உடானா பந்தில் கருணரத்னேவிடம் கேட்ச் தந்து அவுட்டானார். இது அவரது 14-ஆவது ஒருநாள் சதமாகும்.
ஸ்டீவ் ஸ்மித் 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 59 பந்துகளில் 73 ரன்களை விளாசி, மலிங்கா பந்தில் போல்டானார். இதில் தனது 22-ஆவது ஒருநாள் அரைசதத்தையும் பதிவு செய்தார். அப்போது ஸ்கோர் 278/4 ஆக இருந்தது.
பின்னர் ஆட வந்த மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி, நுவண்பிரதீப்பின் ஓரே ஓவரில் 22 ரன்களை குவித்தார்.
மறுமுனையில் ஷான் மார்ஷ் 3, அலெக்ஸ் கரே 4, பேட் கம்மின்ஸ் 0 என சொற்ப ரன்களுடன் அவுட்டாயினர்.
1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 46 ரன்களுடன் மேக்ஸ்வெல்லும், 4 ரன்களுடன் ஸ்டார்க்கும் அவுட்டாகாமல் இருந்தனர்.
50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ரன்களை குவித்தது ஆஸி.
இலங்கை தரப்பில் இசுரு உடானா 2-57, தனஞ்செய டி சில்வா 2-40 விக்கெட்டை வீழ்த்தினர்.
தொடக்க ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிய இலங்கை பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்கள் எனப்படும் கடைசி கட்டத்தில் ரன்கள் வழங்காமல் சிறப்பாக பந்துவீசினர்.
இலங்கை திணறல்: 335 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை தொடக்க வீரர்கள் திமுத் கருணரத்னே-குஸால் பெரைரா இணை ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 13-ஆவது ஓவரில் ஸ்கோர் 100-ஐ கடந்தது. 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 52 ரன்களை குவித்த குஸால் பெரைராவை போல்டாக்கினார் ஸ்டார்க்.
பெரைரா, கருணரத்னே அரைசதம்: அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஸால் பெரைரா தனது 13-ஆவது ஒருநாள் அரைசதத்தையும், கேப்டன் கருணரத்னே 4-ஆவது ஒருநாள் அரைசதத்தையும் பதிவு செய்தனர்.
தப்பிய கருணரத்னே: ஒரு ரன்னை எடுக்க கருணரத்னே ஓடிய போது, ஆஸி. வீரர் காஜா ஸ்டம்புகளை நோக்கி அடித்த பந்து, தவறி சென்றுவிட்டது. இதனால் ரன் அவுட்டில் இருந்து தப்பினார் கருணரத்னே. பொறுமையாக ஆடி வந்த லஹிரு திரிமனே 16 ரன்களுடன் பெஹ்ரண்டர்ப் பந்தில் வெளியேறினார்.
9 பவுண்டரியுடன் 108 பந்துகளில் 97 ரன்களை விளாசிய கருணரத்னே, கேன் ரிச்சர்ட்ஸன் பந்தில் அவுட்டாகி சதத்தை தவற விட்டார்.
எனினும் ஆஸி.யின் அபார பந்துவீச்சை எதிர்கொள்வதில் திணறியது இலங்கை. மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 9 ரன்களுடன் கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார். பின்னர் வந்த சிறிவர்த்தனா 3, திஸாரா பெரைரா 7 ஆகியோரை ஸ்டார்க் வெளியேற்றினார். அதன் பின்னர் இசுரு உடானா 8, மலிங்கா 1 ரன்னுக்கு அவுட்டானார்கள். அப்போது 41.4 ஓவர்களில் 237/9 ரன்களை எடுத்திருந்தது இலங்கை.
இதையடுத்து அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 45.5 ஓவரில் 247 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது இலங்கை அணி. இதனால் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை தோற்கடித்தது.