ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஒரு துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை எளிதாக வீழ்த்தியது.
பிட்ச் நல்ல வாகாக இருந்ததாலும், தொடக்கத்தில் பந்துகள் ஸ்விங் ஆகாததாலும் ஷிகர் தவணுக்கு சவுகரியாகிப் போனது, அவர் 109 பந்துகளில் 16 பவுண்டர்களுடன் 117 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் கொடியேற்றி ஆட்டமிழந்தார்.
அப்போது இந்திய அணி ஸ்கோர் 37 ஓவர்கள் முடிவில் 220/2. ஓவருகு 5.94 என்று வலுவாகச் சென்று கொண்டிருந்தது, கோலி ஒருமுனையில் நிற்கிறார்.
அப்போது சற்றும் எதிர்பாரா முடிவாக ஹர்திக் பாண்டியாவை 4ம் நிலையில் களமிறக்கியது இந்திய அணி.
இதில் இந்திய முடிவு தோல்வியடைந்திருக்க வேண்டியது. காரணம் பாண்டியா வந்தவுடனேயே எட்ஜ் செய்து கேட்ச் கொடுத்தார்.
பாண்டியா ரன் எடுக்காமல் இருந்த போது கூல்ட்டர் நைல் பந்து ஒன்றை எட்ஜ் செய்ய வழக்கமாக விக்கெட் கீப்பர்கள் பிடிக்கும் கேட்சையே ஆஸி. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பிடிக்காமல் கோட்டை விட்டார். கூல்ட்டர் நைல் அதிர்ச்சியடைந்தார்.
டக்கில் போயிருக்க வேண்டியவர் அதன் பிறகு 27 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசி ஆட்டமிழக்கும் போது ஸ்கோர் 46 ஓவர்களில் இந்திய அணி 300 ரன்களைக் கடந்திருந்தது, இதனால் கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி 117 ரன்களை விளாசியது.
பாண்டியாவை டக்கில் வீழ்த்தியிருந்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேன் இவர் அளவுக்கு வேகமாக ஸ்கோர் செய்திருக்க முடியாது. எப்படியும் விராட் கோலி கூறியது போல் பாண்டியாவினால் இந்திய அணிக்கு 30 ரன்கள் கூடுதலாகக் கிடைத்தது.
அதன் படி பார்த்தால் பாண்டியாவை அந்தக் கேட்சை எடுத்து ஆஸ்திரேலியா வீழ்த்தியிருந்தால் அந்த அணி 353 ரன்களை விரட்ட நேரிட்டிருக்காது மாறாக 320 ரன்கள் பக்கம் விரட்ட நேரிட்டிருக்கலாம் ஒருவேளை போட்டியையே கூட வென்றிருக்கலாம்.
கேட்சஸ் வின் மேட்சஸ் என்ற கிரிக்கெட் பழமொழியின் உண்மைத்தன்மைக்கு இது இன்னொரு உதாரணமானது.