இந்த வெற்றிக்கு இந்திய அணி தகுதியானது தான்; டிவில்லியர்ஸ்
தென் ஆப்ரிக்கா அணியுடனான டி.20 தொடரின் வெற்றிக்கு இந்திய அணி முழு தகுதியானது தான் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்த நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கிலும், டி.20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி அபாரமாக கைப்பற்றி வரலாறு படைத்தது.
தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சாதனை படைத்த இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான டிவில்லியர்ஸும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து டிவில்லியர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “தென் ஆப்ரிக்கா வீரர்கள் கடுமையாகவே போராடினர், ஆனால் இந்திய அணி எங்கள் வீரர்களை விட சிறப்பாகவே விளையாடினர், இந்த வெற்றிக்கு இந்திய அணி நிச்சயம் தகுதியானது தான்” என்று பதிவிட்டுள்ளார்.