சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த டி வில்லியர்ஸ், தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்று உலகக்கோப்பை அணிக்கு களமிறங்குவாரா? என்பது குறித்து பதில் அளித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடந்த மே மாதம் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வு அளித்தார். ஆனாலும், தொடர்ந்து ரசிகர்கள் அவரை உலக கோப்பை வரை ஆடுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.
மிஸ்டர் 360 என அனைவராலும் அழைக்கப்படும் வலது கை ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் அனைவராலும் விரும்பப்படும் ஒருவர். கடந்த ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பின்னர் திடீரென ஓய்வு பெற்றார். இரு தொடர்களிலும் அவர் ஆடிய 7 டெஸ்ட் போட்டிகளில் 6 அரை சதங்களும் ஒரு சதம் அடித்து அசத்தியுள்ளார். அதேபோல் கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் ஆடி 480 ரன்கள் அடித்தார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும். ஓய்வுக்கு பிறகு தொடர்ந்து பங்களாதேஷ் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆகியவற்றில் கலந்து கொண்டு அசத்தினார்.
இப்படி அனைத்து தொடர்களிலும் சிறப்பாக ஆடி கொண்டிருக்கையிலேயே ஓய்வுபெற்ற டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு உலகக் கோப்பையில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு பதிலளித்த அவர், ” நல்ல நிலையில் இருப்பதாலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன் வருடத்திற்கு 10 முதல் 11 மாதங்கள் தொடர்ந்து ஆடி வருவதால் என்னால் அனைத்து வித போட்டிகளிலும் தெளிவான கவனத்தை செலுத்த இயலவில்லை. எனக்கு சிறிய வகை போட்டிகள் நன்கு துணை கொடுப்பதால் சர்வதேச போட்டியில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருக்கிறேன்” என தெரிவித்தார்.
உலக கோப்பை தொடருக்கு திரும்புவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் வெளியில் இருந்து அணியின் சிறப்பான ஆட்டத்தை கண்டு களிக்க ஆசைப்படுகிறேன். பலநாட்டு தொடர்களில் ஆடி வருவதால், இனி சர்வதேச கிரிக்கெட் அணிக்கு திரும்புவது குறித்து யோசிக்க இடமில்லை” என திட்டவட்டமாக கூறியுள்ளார்