சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த தென் ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மென் ஏ.பி.டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவாரா ஆடமாட்டாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.
இந்நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இது குறித்து மவுனம் கலைத்துள்ளார்:
“ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆடுவேன், அதே போல் டைட்டன்ஸ் அணிக்கு ஆடி இளம் வீரர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன், என்னிடம் திட்டமிடல் எதுவுமில்லை. இதனை நீண்டநாட்களாக என்னால் தெரிவிக்க முடியாமல் இருந்தது அவ்வளவே.
நிறைய இடத்திலிருந்து அழைப்புகள் வருகின்றன. ஆனால் இந்த அழைப்புகள் ஏற்படுத்தும் ஆச்சரியம் எனக்கு பிடித்திருக்கிறது. என்ன செய்யப்போகிறேன் என்று தெரியாது” என்று தென் ஆப்பிரிக்க ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் காத்திருக்கும் அந்தச் செய்தி வந்து விட்டது, உங்கள் பதற்றங்களை சரி செய்து கொள்ளுங்கள், டிவில்லியர்ஸ் எங்கும் செல்லவில்லை. தன் 360 டிகிரி அதிசயங்களுடன் அவர் மீண்டும் நம்மை மகிழ்விக்க வருகிறார்” என்று பதிவிட்டுள்ளது.
முன்னதாக அவர் ஓய்வு பெறும் போது, ‘களைப்படைந்து விட்டேன், ஆற்றல் தீர்ந்து விட்டது’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் அறிமுகம்: 2004, போர்ட் எலிசபத், இங்கிலாந்துக்கு எதிராக
ஒரு நாள் அறிமுகம் 2005 இங்கிலாந்துக்கு எதிராக
கடைசி டெஸ்ட்: மார்ச் 30, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜொஹான்னஸ்பர்க் 2018
கடைசி ஒருநாள்: பிப்.16, 2018 இந்தியாவுக்கு எதிராக சென்சூரியன்.
டி20 அறிமுகம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2006
கடைசி டி20: 2017-ல் வங்கதேசத்துக்கு எதிராக.
டெஸ்ட் கிரிக்கெட்: 114, 8,765 ரன்கள், சராசரி 50.66, 22 சதங்கள், 46 அரைசதங்கள் 222 கேட்ச் 5 ஸ்டம்பிங். அதிகபட்ச ஸ்கோர் 278.
ஒருநாள் சர்வதேசம்: 228, 9,577, சராசரி 53.50., அதிகபட்ச ஸ்கோர் 176, 25 சதங்கள் 53 அரைசதங்கள். 840 பவுண்டரிகள், 204 சிக்சர்கள். 176 கேட்ச்கள் 5 ஸ்டம்பிங்குகள்.
டி20 சர்வதேசம்: 78, 1672, அதிகபட்சம் 79, சராசரி 26.12. 10 அரைசதம் 140 பவுண்டரிகள் 60 சிக்சர்கள். 65 கேட்ச்கள் 7 ஸ்டம்பிங்குகள்