அர்ஷ்தீப் சிங்கின் சமீபத்திய செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர்.
இந்திய அணியின் இளம் வீரர் அர்ஷ்திப் சிங், கடந்த ஜூலை மாதம் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகி, பந்துவீச்சில் நம்பிக்கையளிக்கும் விதமாக செயல்பட்டதால் ஆசியக்கோப்பை தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் இடம்பெற்று விளையாடினார். டி20 உலகக்கோப்பை தொடர் இவருக்கு சிறப்பாகவே அமைந்தது.
அதற்பிறகு நடைபெறும் டி20 தொடர்களில் அர்ஷ்தீப் செயல்பாடு சமீபகாலமாக பல்வேறு விமர்சனத்தை பெற்றுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் ஒரு போட்டியில் தொடர்ச்சியாக மூன்று நோ-பால்கள் மற்றும் அந்த ஒரு போட்டியில் மட்டும் மொத்தமாக ஐந்து நோ-பால்கள் என படுமோசமாக பந்து வீசினார்.
அதன் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் 20வது ஓவரில் ஒரு நோ-பால் உட்பட 27 ரன்கள் வாரிக்கொடுத்து மொத்த ஆட்டத்தையும் நியூசிலாந்து பக்கம் திருப்பிவிட்டார். பல போட்டிகள் நன்றாக செயல்பட்டு வந்தாலும் ஒரு சில போட்டிகளில் இவர் செய்யும் தவறு இந்திய அணியின் வெற்றியை பாதித்து விடுகிறது. இதனால் பல்வேறு விமர்சனங்களையும் இவர் சந்திக்க நேரிடுகிறது.
இந்நிலையில் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் இப்படி மோசமாக செயல்பட்டு வரும் விதத்தை கடுமையாக விமர்சித்து சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர் என்கிற அந்தஸ்துக்கு சரிப்பட்டு வரமாட்டார் என விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கௌதம் கம்பீர்.
“டி20 போன்ற போட்டிகளில் ரன்களை வாரி கொடுப்பது என்பது சாதாரணமான ஒன்று. ஏனெனில் ஒரு சில மைதானங்களில் 200-230 ரன்கள் அடிப்பார்கள். அப்போது ஓரிரு பவுலர்கள் 40-50 ரன்கள் கொடுப்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.
ஆனால் சர்வதேச போட்டிகளில் எந்த ஒன்றையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றால், நோ-பால்கள் மற்றும் அதிக ஒயிடுகள் வீசுவது. இது பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நோ-பால்கள் வீசும் அளவிற்கு கட்டுப்பாடு இல்லாமல் பந்து வீசினால், சர்வதேச பிளேயர் என்று சொல்லிக் கொள்ள தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். சர்வதேச போட்டிகளில் நோபல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது எந்த விதத்தில் வேண்டுமானாலும் அணியை பாதிக்கலாம்.
உம்ரான் மாலிக் டெத் ஓவர்களில் வேகமாக வீசுகிறார். ஒரு சில நேரங்களில் ரன்கள் செல்கிறது. அதிகமான நேரங்களில் அவரால் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளையும் எடுக்க முடிகிறது. அதேபோல் சிராஜ் நிறைய டெக்னிக் வைத்திருக்கிறார். அவரால் எளிதாக பேட்மன்களை திணறடிக்க முடிகிறது. அர்ஷ்தீப் சிங் இடம் அதிகமான வேகமும் இல்லை, டெக்னிக்கும் இல்லை. தனது பலம் மற்றும் பலவீனம் புரிந்து கொண்டு அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் செயல்பட வேண்டும். ஒரு போட்டியில் நிறைய நோ-பால் மற்றும் ஒயிடுகள், மற்றொரு போட்டியில் விக்கெட்டுகள் என்று மாறிமாறி செயல்படுவது சர்வதேச போட்டிகளுக்கு சரிவராது.” என்று தனது விமர்சனத்தில் கம்பீர் குறிப்பிட்டார்.