பி.சி.சி.ஐ., இணையதளத்தில் தல தோனி தான் இப்பவும் கேப்டன்
இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய அணியின் கேப்டனாக தோனியின் பெயரே பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி இந்திய அணிக்கு ஐ.சி.சி.,யால் நடத்தப்பட்டு அனைத்து விதமான தொடர்களிலும் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சிறப்பிற்கு சொந்தக்காரர்.
இந்திய அணியை கெத்தாக வழிநடத்தி கொண்டிருந்த தோனி கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் திடீரென தனது கேப்டன் பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்தார். இளைஞர்களுக்கு வழிவிட்டு கேப்டன் பதவியை ராஜினாமா செய்த தோனி, தற்போது விராட் கோஹ்லியின் தலைமையில் சாதரண வீரராக விளையாடி வருகிறார்.
இங்கிலாந்து அணியுடனான நடப்பு தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் தோனி, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் கடும் விமர்ச்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ஓய்வு சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும் முன்னாள் கேப்டன் தோனியை இன்னும் கேப்டன் என இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
நேற்று (19-07-18) மாலை வரை இருந்துள்ளது. இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் இந்திய அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோஹ்லியின் பெயருக்கு கீழ் எதுவும் போடாமல் சாதரண ஒரு வீரரை போன்ற பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ள நிலையில், தோனியின் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். கோஹ்லி ரசிகர்கள் வழக்கம் போல் பி.சி.சி.ஐ.,யும் தோனியையும் விமர்சித்து வருகின்றனர்.
தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2014ல் ஓய்வை அறிவித்தார். பின் கடந்த 2017 ஜனவரி மாதம் ஒருநாள், டி-20 கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.