கம்மின்ஸிற்கு பதிலாக மும்பை அணியில் இணைகிறார் ஆடம் மில்னே !!

கம்மின்ஸிற்கு பதிலாக மும்பை அணியில் இணைகிறார் ஆடம் மில்னே

காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய பேட் கம்மின்ஸிற்கு பதிலாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று வருவதால் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில்  ஆதரவு பெருகி வரும் நிலையில், மறுபுறம் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலும் நீண்டு கொண்டே வருகின்றது.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து முதுகு வலியால் கடந்த சில தினங்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் பேட் கம்மின்ஸ் வெளியேறினார். கம்மின்ஸ் வெளியேறியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்திருந்த நிலையில், கம்மின்ஸிற்கு பதிலாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான ஆடம் மில்னேவை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஆடம் மில்னே இதற்காக நேற்று நியூசிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ளதாகவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாமில் ஆடம் மில்னேவும் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான முதல் போட்டியின் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா எப்பொழுது அணிக்கு திரும்புவார் என்பது தெரியாமல் மும்பை ரசிகர்கள் கவலை கொண்டுள்ள நிலையில், ஆடம் மில்னேவின் வருகை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது, இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலம் என்பதில் சந்தேகம் இல்லை.

இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டியிலும் தோல்வியையே சந்தித்துள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

Mohamed:

This website uses cookies.