ஆடம் ஜாம்பா மினி ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாமல் போனது ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
2023 ஐபிஎல் மினி ஏலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக் கொண்டு எடுத்து வருகின்றன.
முதல் கட்டமாக வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் ஏலத்தில் விடப்பட்டனர். அதற்கு அடுத்ததாக வெளிநாட்டு பவுலர்கள் விடப்பட்டனர்.
கடந்த 2022 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று எந்த அணியாலும் எடுக்கப்படாத ஆடம் ஜாம்பா மீண்டும் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றார். சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சு தரவரிசையில் இரண்டிலும் ஏழாவது இடத்தில் இருந்து வருகிறார் ஜாம்பா.
ஆஸ்திரேலியா அணிக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் முன்னணி சுழல்பந்து வீச்சாளராக இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் இதற்கு முன்பு நன்றாகவும் செயல்பட்டு இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடிய அவர் சிறப்பாக செயல்பட்டார்.
இம்முறை ஏலத்தில் ஆரம்பவிலையாக 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் பங்கேற்றார். சிறந்த சூழல் பந்துவீச்சாளராக பார்க்கப்படும் அவரை பல அணிகள் எடுக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு அப்படியே தலைகீழாக எந்த ஒரு அணியும் அவரை எடுப்பதற்கு முன்வரவில்லை.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. முன்னதாக கொரோனா பரவல் கட்டுப்பாடுக்கு வந்த பிறகு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டது. இவரை நம்பி எடுத்த அணிக்கு விளையாட வர முடியாது என்று அறிவித்து, சொந்த நாட்டிலேயே இருந்துவிட்டார்.
அதற்கு அடுத்ததாக, ஐபிஎல் போட்டிகளை குறைத்து பேசி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ் லீக் போட்டிகளை உயர்த்திப் பேசினார். இதன் காரணமாகவும் பல அணிகள் அவரை கண்டுகொள்ளவில்லை என பேசப்படுகிறது.
இவரை நம்பி எடுத்துவிட்டு பாதியிலேயே அணியிலிருந்து இவர் வெளியேறினால் அணிக்குத்தான் சிக்கல் ஏற்படும் என்ற நோக்கத்திலும் இவரை எடுக்காமல் விட்டுவிட்டனர்.
முதல் கட்ட ஏலம் முடிவடைந்த பிறகு மீதமுள்ள வீரர்களுக்கு மீண்டும் ஒருமுறை ஏலம் விடப்படும். அப்போது இவரை ஏதாவது அணி எடுக்க முன் வருகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.