தொடர் தோல்வி; மல்லுக்கட்டி கொண்ட ஆஃப்கானிஸ்தான் வீரர்கள்
இங்கிலாந்து அணியுடன் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப்பின் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஹோட்டல் திரும்பியபோது அங்கு மக்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
உலகக் கோப்பைப் போட்டியில் மான்செஸ்டரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
இந்நிலையில் போட்டி முடிந்தபின் நேற்று இரவு மான்செஸ்டரில் நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு ஆப்கானிஸ்தான்அணியினர் சென்றுள்ளனர். அப்போது ஹோட்டலில் இருந்த சிலர் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிலரை புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது, அங்கிருந்தவர்களுக்கும், ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் ஆப்கானிஸ்தான் வீரர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து கிரேட்டர் மான்செஸ்டர் போலீஸார் வெளியிட்ட அறிக்கையில், ” மான்செஸ்டர் நகரில் லிவர்பூல் சாலையில் உள்ள அக்பர் ரெஸ்டாரன்டில் இரவு 11.15 மணி அளவில் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும், பொதுமக்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அங்கு சென்றோம்.
அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம இருந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த தகராறில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, யாரையும் கைதுசெய்யவில்லை. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.