ராகுல் திராவிடுக்கு ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகிப்பதற்காக பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியதையடுத்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் கொந்தளித்துள்ளனர்.
ஏற்கெனவே கங்குலி, ‘இந்தியக் கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சாடியிருந்தார். இந்நிலையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே, ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையின் எந்தத் துறையிலும் இரட்டை ஆதாயம், பதவி வரவே செய்யும். இதை முறையாக வெளிப்படுத்துவதுதான் முக்கியம்.
“எல்லா தொழில்களிலும் இத்தகைய இரட்டை நல முரண் இருக்கவே செய்யும். இதை எப்படி கையள்வது, நாம் எதில் ஈடுபடுவோம் என்பதை எப்படி முன்கூட்டியே கூற முடியும், இது மிகவும் சிக்கலானது. ஒருமுறை நாம் எதில் எதிலெல்லாம் ஈடுபட்டுள்ளோம் என்பது தெரியவந்து விட்டாலே அங்கு ஆதாயம், இரட்டைப் பதவி, முரண் ஆகியவை மறைந்து விடுகின்றன.
இந்தியாவில் 300 கிரிக்கெட் வீரர்கள்தான் உள்ளனர், இதில் 50% தற்போது வாழ்ந்து வருகின்றனர். ஆகவே இவர்கள்தான் ஆட்டத்துக்கு தங்களால் இயன்றதைத் திருப்பிச் செய்ய முடியும். நீங்கள் இவர்கள் ஆட்டத்திற்குத் திரும்பிப் பங்களிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தால் நீங்கள் கிரிக்கெட்டுக்கு பங்களிக்க வேறு யாரையாவதுதான் கொண்டு வர வேண்டும்.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரர் மட்டுமே இரட்டை நல முரண் பிரச்சினையை கையாள வேண்டியுள்ளது. இது துரதிர்ஷ்டவசம் என்பதோடு இதில் சிலர் மட்டுமே கிரிக்கெட் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதே உண்மை. சில கிரிக்கெட் வீரர்கள்தான் இந்தியாவுக்கு ஆடியுள்ளனர்” இவ்வாறு கூறினார் அனில் கும்ப்ளே.
இந்திய கிரிக்கெட்டை வணிக ரீதியாகவும் தர ரீதியாகவும் உயர்த்தியவர்களில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, திராவிட், லஷ்மண் ஆகியோர் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் தற்போது கோலி, தோனி, ரோஹித் சர்மா என்று பட்டியல் நீளும், ஆனால் இதில் முன்னோடிகள் நால்வரைக் குறிவைத்து ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரத்தை பிசிசிஐ எழுப்பியுள்ளது பலரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.