நாங்களும் மனுசங்க தான்… கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க; ரவி சாஸ்திரி வேண்டுகோள் !!

இந்த வருட ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு இந்திய வீரர்களுக்கு நிச்சயம் இரண்டு வாரமாவது ஓய்வு தேவை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கியது. இன்று துவங்கியுள்ள டெஸ்ட் தொடர் மார்ச் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு மார்ச் 12ம் தேதி துவங்கும் டி.20 தொடர் மார்ச் 20ம் தேதி வரையும், மார்ச் 23ம் தேதி துவங்கும் ஒருநாள் தொடர் மார்ச் 28ம் தேதியுடன் நிறைவடைகிறது. இங்கிலாந்து அணியுடனான தொடரை முடித்த கையோடு இந்திய அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தநிலையில், ஓய்வு இல்லாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய வீரர்களுக்கு நிச்சயம் இரண்டு வாரமாவது ஓய்வு தேவை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், “கிரிக்கெட்டிலிருந்து ஒரு சிறிய இடைவெளி அதாவது ஓய்வுக்காலம் ஒவ்வொரு வீரருக்கும் கட்டாயம் என்பதை நான் திடமாக நம்புகிறேன். இப்போது இங்கிலாந்து தொடருக்கு பின்பு மீண்டும் ஐபிஎல். அப்போது ஐபிஎல் முடிந்த பின்பு வீரர்களுக்கு குறைந்தது 2 வாரம் ஓய்வுக்காலம் அவசியம். இந்தக் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் நாட்கள் வீரர்களை மனதளவில் பாதிக்க செய்கிறது. நாம் எல்லோரும் மனிதர்கள்தான் கிரிக்கெட் வீரர்களும் அப்படிதான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும் பேசிய ரவி சாஸ்திரி “அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடும்போது கிடைக்கும் பெருமை எல்லாம் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும். இங்கு ஒவ்வொரு கிரிக்கெட் தொடரும் முக்கியமானது. அதேபோல கிரிக்கெட்டின் ஒவ்வொரு பார்மெட்டும் முக்கியமானது. இந்திய அணியை பொறுத்தவரை பல நல்ல வீரர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அந்த வீரர்கள் எல்லாம் ஒவ்வொரு பார்மெட்டுக்கும் ஏற்ப இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வாய்ப்புக்காக பசியோடு காத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.