ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதரபாத் சன் ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. அதன் தொடக்க ஆட்டக்காரரர் ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 77 ரன்களை குவித்தார்.
ஹைதராபாத் ராஜிவ் காந்தி விளையாட்டரங்கில் இரு அணிகள் இடையே ஆன ஆட்டம் திங்கள்கிழமை இரவு நடந்தது.
முன்னதாக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து ராயல்ஸ் அணி தரப்பில் ரஹானே, சாம்சன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரஹானே 13 ரன்களுடன், ஆர்சி ஷார்ட் வெறும் 4 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பென் ஸ்டோக்ஸ் 5, ராகுல் திரிபாதி 17, கிருஷ்ணப்பா கெளதம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஜோஸ் பட்லர் 6, ஷ்ரேயஸ் கோபால் 18, ஜெயதேவ் உனத்கட் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார். தவல்குல்கர்னி மற்றும் பென் லாஹ்லின் ஆகியோர் முறையே 3 மற்றும் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் அல் ஹாசன், எஸ்.கெளல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர்குமார், ஸ்டேன்லேக், ரஷித்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.
சன்ரைசர்ஸ் அணி 127/1: பின்னர் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ரித்திமான் சாஹா ஆகியோர் களம் கண்டனர். ஆனால் ராயல்ஸ் அணியின் உனத்கட் பந்துவீச்சில் சாஹா வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் ஆட வந்த கேப்டன் கேன் வில்லியம்ஸன்-தவான் ஜோடி அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டது. 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 57 பந்துகளில் 77 ரன்கழை குவித்த தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் இணைந்து ஆடிய கேன் வில்லியம்ஸன் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் 36 ரன்களை குவித்தார்.
ராயல்ஸ் அணி தரப்பில் உனத்கட் மட்டும் ஒரு விக்கெட்டை சாய்த்தார். இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 15.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 127 ரன்களுடன் வெற்றி வாகை சூடியது.