இந்தியாவில் நான்காவது இடத்திற்கு ரஹானே தான் சரியான வீரர் என பிசிசிஐ முன்னாள் செயலாளர் சஞ்சய் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
சுமார் 2017ம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி நடுவரிசை பேட்டிங்கில் தடுமாறியது பெருத்த ஏமாற்றம் அளித்தது. இந்திய அணியில் 4வது இடத்தில் ரகானே சிறப்பாக ஆடி வந்தார். ஓரிரு தொடர்களில் தடுமாறினார். அதன் பிறகு, அணியில் இடம்பெற்ற ராயுடு ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதும் தொடர்ந்து அவர் அணியில் இடம்பெற்று வந்தார்.
துரதிஸ்டவசமாக, உலக கோப்பையில் அவருக்கு இடமளிக்கப்படவில்லை. நிதாஸ் கோப்பையிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் திருப்தி தரும் விதமாக செயல்பட்ட விஜய் சங்கருக்கு பௌலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் பங்களிப்பு கிடைக்கும் என்பதற்காக அணியில் எடுக்கப்பட்டது.
அம்பத்தி ராயுடு பில்டிங்கில் மோசமாக இருந்து வந்ததால் விஜய் சங்கருக்கு அணியில் இடம் உறுதியானது. இருப்பினும் உலக கோப்பை தொடரின் போது மூன்று போட்டியில் ஆடிய பிறகு காயம் காரணமாக விஜய் சங்கர் வெளியேறினார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் உள்ளே கொண்டுவரப்பட்டார். அப்போதும் அம்பத்தி ராயுடுவிற்கு இடம் மறுக்கப்பட்டது.
இப்படி தொடர்ந்து இந்திய அணியின் மிடில் ஆர்டர் குழப்பத்திலேயே இருந்திருக்கிறது. நம்பி எடுக்கப்பட்ட கேதர் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படவில்லை. இந்நிலையில் பல வல்லுனர்களும் விமர்சகர்களும் இந்திய அணியின் நடுவரிசை குறித்து தொடர்ந்து விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பி வந்தனர்.
இதற்கு தற்போது பிசிசிஐ முன்னாள் செயலாளர் சஞ்சய் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ரகானே இதற்கு சிறப்பாக இருப்பார். ஒருநாள் போட்டி 50 ஓவர்கள் கொண்டது. அதில் நிலைத்து ஆட தரமான பேட்ஸ்மேன் வேண்டும். அதுவும் நடுவரிசை என்பது ஒவ்வொரு அணிக்கும் முக்கியமான ஒன்று. ரஹானே இந்திய மண்ணில் மட்டும் அல்லாமல், வெளிநாடுகளிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அடுத்து வரும் சில வருடங்களுக்கு அவர் தான் சரியான நபராக இருப்பார். அவரை முயற்சி செய்து பார்ப்பது சிறந்தது என்றார்.
ரஹானே கடைசியாக 2018 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா தொடரின்போது ஒருநாள் போட்டியில் ஆடினார். அதன் பிறகு ஒருநாள் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.