மூன்றாவது போட்டியில் வெங்கடேச ஐயர் வெளியில் அமர்த்தப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
தென்னாப்பிரிக்கா அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பு வரை சென்று 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய பிறகு நான்கு மாற்றங்களுடன் 3-வது போட்டியில் களம் இறங்கியது. மூன்றாவது போட்டியில் வெங்கடேச ஐயர் வெளியில் அமர்த்தப்பட்டு, சூர்யகுமார் யாதவ் எடுத்துவரப்பட்டார்.
மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின், தாக்கூர், புவனேஸ்வர் குமார் ஆகியோரும் வெளியில் அமர்த்தப்பட்டு ஜெயந்த் யாதவ், தீபக் சஹர் மற்றும் பிரஷீத் கிருஷ்ணா ஆகியோர் உள்ளே எடுத்து வரப்பட்டனர். இத்தனை மாற்றங்கள் செய்த இந்திய அணிக்கு, அது பலனளிக்கவில்லை. இறுதியில் தோல்வியைத் தழுவ நேரிட்டது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் தீபக் சஹர் நன்றாக செயல்பட்டார். அதேபோல் சூரியகுமார் யாதவும் கீழ் வரிசையில் நன்றாக விளையாடினார்.
மூன்றாவது போட்டியில் வெங்கடேச ஐயர் வெளியில் அமர்த்தப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில், “வெங்கடேச ஐயர் புதிதாக இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். வெறும் இரண்டு போட்டிகளில் மட்டும் வாய்ப்பு கொடுத்து விட்டு மூன்றாவது போட்டியில் இளம் வீரரை வெளியில் அமர்த்துவது முற்றிலும் தவறாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக ஒரு போட்டியில் மட்டுமே பந்துவீச வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அவரது முழு திறமையை வெளிப்படுத்த இன்னும் கூடுதல் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இப்படி அரைகுறையாக வாய்ப்புகள் கொடுத்தால் அடுத்தடுத்த தொடர்களில் அவரால் இடம்பெறுவது கடினமான செயலாக மாறிவிடும். இது இந்திய அணியின் எதிர்காலத்தையும் பாதிக்கலாம்.
கேஎல் ராகுல் இந்த விஷயத்தில் மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டார். இரண்டு போட்டிகளில் அனுபவமிக்க அவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்படி இருக்க, வெங்கடேச ஐயர் தனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் இருக்கிறார். அவர் செய்த சிறு தவறுக்காக வெளியில் அமர்த்துவது எந்த வகையிலும் சரியான முடிவு இல்லை.” என்றார்.
மேலும் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் சஹல் ஆகியோர் குறித்தும் ஆகாஷ் சோப்ரா தனது விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.