2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்வு செய்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கிறது. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து துபாய் சென்ற வீரர்கள் தனிமைப்படுத்துதலில் இருந்தபோது சென்னை அணியில் இரண்டு வீரர்கள் உட்பட மொத்தம் 13 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. பிறகு இரண்டாம் கட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என தெரியவந்ததால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டனர். இருக்கும் வீரர்களை வைத்து ஐபிஎல் தொடரை சிறப்பாக விளையாட முடியும் என தோனி கூறியதாக சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை அணியை பொறுத்தவரை இந்த ஆண்டு இவர்கள் ஆடினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என சிறந்த 11 வீரர்களை வரிசைபடுத்தி இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா. மேலும் அவர் சுரேஷ் ரெய்னா இடத்திற்கு இவர் இறங்கினால் மிகவும் கச்சிதமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “துவக்க வீரர்களாக ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு இருவரும் இறங்கினால் மிகவும் கச்சிதமாக இருக்கும். சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு விளையாடாததால் அவரது இடத்திற்கு டு ப்லஸ்ஸிஸ் களமிறங்க வேண்டும். அவரது நேர்த்தியான ஆட்டமும் அனுபவமும் ரெய்னா அளவிற்கு ரன் குவிக்க உதவும். நான்காவது இடத்தில் கேதர் ஜாதவ் அல்லது தோனி இருவரில் யாராவது ஒருவர் இறங்கினால் சரியாக இருக்கும். ஐந்தாவது இடமும் இவர்கள் இருவரில் ஒருவர் இறங்கிக் கொள்ள வேண்டும்.
ஆறாவது இடம் அனுபவம் மிக்க சுழல்பந்து வீச்சாளர் ஜடேஜாவிற்கு உரிய இடமாகும். ஏழாவது இடத்தில் சிறந்த ஆல்ரவுண்டர் ஆன பிராவோ மற்றும் எட்டாவது இடத்தில் மற்றுமொரு ஆல்ரவுண்டர் ஆன சாண்ட்னர் இறங்கினால் சென்னை அணிக்கு கிட்டத்தட்ட எட்டாவது இடம் வரை பேட்டிங் வரிசைக்கு பலம் சேர்க்கும்.
அதற்கு அடுத்தடுத்த இடங்களில் தாக்கூர், இம்ரான் தாஹிர் ஆகியோர் இறங்குவது மிகவும் உசித்தமாக இருக்கும் என தனது கணிப்பை தெரிவித்திருந்தார்.