சுழல் பந்துவீச்சாளருக்கு ஒரு வருடம் பந்துவீச தடை விதித்துள்ளது ஐசிசி. முறைகேடாக பந்து வீசியதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. முதல் டெஸ்ட் போட்டியின் போது, இலங்கையைச் சேர்ந்த சூழற் பந்துவீச்சாளராக அகில தனஞ்சயா விதிமுறையை மீறி பந்து வீசியதாக போட்டியின் நடுவர்கள் ஐசிசி அமைப்பிடம் புகார் அளித்தனர்.
கடந்த 10 மாதங்களில் தனஞ்செயாவின் பந்துவீச்சின் மீது எழுப்பப்படும் இரண்டாவது புகார் ஆகும்.
இந்நிலையில் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக தனஞ்செயா அனுப்பப்பட்டார். மருத்துவர்களின் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்ட போது, தனஞ்செயா பந்துவீச்சு சீரான நிலையில் இல்லை என்றும், 4 முதல் 17 டிகிரி வரை இவரது கை வளைவதாகவும் மருத்துவர்கள் கூறினார். மேலும், இதுகுறித்த, முழு ரிப்போர்ட் ஐசிசி தரப்பிற்கு அனுப்பப்பட்டது.
இதனை ஐசிசி-இன் தரப்பு நிபுணர் ஆண்ட்ரே குட்டி பரிசீலித்து உறுதி செய்தார். இதனால், முறைகேடாக பந்து வீசியதற்காக தனஞ்செயா ஒரு வருடகாலம் பந்துவீச தடை விதிக்கப் பட்டுள்ளார். மூன்று விதமான போட்டிகளிலும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரம் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டு தனஞ்ஜெயாவின் பந்துவீச்சு பரிசோதிக்கப்பட்ட போது, அப்போதும் இவர் தேர்ச்சி பெறாதது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் தனஞ்செயா பந்துவீச்சு மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி மாதம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தனஞ்செயா தன்னை நிரூபித்து மீண்டும் இலங்கை அணியில் இடம்பெற்றார்.
அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியதால் உலக கோப்பை தொடரில் தனஞ்ஜெயாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் புறக்கணித்தது. மீண்டும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் எடுக்கப்பட்டார்.