தமிழக வீரரை இந்திய அணியில் நடத்தும் விதத்திற்கு தொடர்ந்து வேதனைப்படுகிறேன்; முன்னாள் விக்கெட் கீப்பர் வருத்தம்

இந்திய அணியில் லிமிடட் ஓவர் போட்டிகளில் அஸ்வினை சரியாக பயன்படுத்தப்படவில்லை என பலமுறை வேதனைப் பட்டிருக்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரிம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருபவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து முன்னணி ஸ்பின்னராக செயல்பட்டுவரும் அஸ்வின் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகப்பெரிய சாதனை பட்டியலில் இடம் பிடித்தார். இந்தச் சாதனையை அதிவேகமாக செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து நீடித்து வரும் இவர் கடந்த சில வருடங்களாக லிமிடெட் ஒவர் போட்டிகளில் இடம்பெறவில்லை. மற்றவர்களின் செயல்பாடு இவரைவிட குறைவாகவே இருந்தாலும் இந்திய அணி தொடர்ந்து வெற்றி வாய்ப்பை பெற்று வருவதால் மாற்று வீரர்களை பயன்படுத்த பிசிசிஐ தரப்பும் தயங்கி வருவதே இதற்கு காரணம் என பல வீரர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதில் ஒருவராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் அஸ்வின் குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

“லிமிடெட் ஓவர் போட்டிகளில் அஸ்வினுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. உள்ளூர் போட்டிகள் மற்றும் வெளிநாட்டு போட்டிகளில் தொடர்ந்து டெஸ்ட் அரங்கில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், பல ஆண்டுகளாக வெள்ளை பந்து போட்டிகளில் அவருக்கான இடம் மறுக்கப்படுகிறது என்றே நான் கூறுவேன்.

குறைந்தபட்சம் இந்தியாவில் நடைபெறும் லிமிடெட் அவர் தொடர்களில் அஸ்வினுக்கு வாய்ப்பினை அளித்திருந்தால் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டிருப்பார். இத்தகைய செயலைத்தான் அவர் இந்திய அணியில் சரியாக நடத்தப்படுவதில்லை என்று நான் குறிப்பிடுகிறேன். இந்திய அணியின் ஸ்பின்னர்கள் பலமுறை திணறியிருப்பதை நாம் கண்டிருக்கிறோம். அந்த சமயத்தில் அஷ்வினை பயன்படுத்த பிசிசிஐ முயற்சித்திருக்க வேண்டும்.” என்று கருத்து தெரிவித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.