“இவரு இப்படிதான் வருவாருன்னு எனக்கு முன்னாடியே தெரியும்” – முன்னணி இந்திய வீரர் குறித்த பலவருட உண்மையை வெளியிட்ட ஜாம்பவான்!
இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி குறித்த பலவருட உண்மையை வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.
இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 2008ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி அதன்பின் அசாத்தியமான பேட்டிங் திறமையினால் உலகபுகழ் பெரும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சினின் சாதனையை முறியடிக்க தகுதியுள்ள ஒரே வீரர் எனவும் பலராலும் கணிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றாப்போலவே இவரது ஆட்டமும் வளர்ச்சியடைகிறது.
அரைசதம் அடித்துவிட்டு சதமடிக்காமல் வெளியேறினால் ஆச்சர்யப்படும் அளவிற்கு சதங்களை சலித்துப்போகும் அளவிற்கு அடித்து தள்ளியிருக்கிறார். இப்போதே 70 சதங்களை அனைத்துவித போட்டிகளிலும் அடித்துவிட்டார். இன்னும் சில ஆண்டுகளில் 100 சதங்கள் என்ற சச்சினின் மைல்கல்லை முறியடிப்பார் என கருதப்படுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான விராட்கோலியின் ஆட்டம் அனைவரையும் ஏமாற்றியது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சொற்ப ரன்களிலேயே வெளியேறி மோசமான பார்மை வெளிப்படுத்தினார். தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், விராட்கோலியின் ஆரம்பகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன். இவர் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடினார். அப்போது இவருடன் விராட்கோலியும் ஆடியிருக்கிறார்.
“விராட்கோலியுடன் பேருந்தில் வந்துகொண்டிருக்கையில் அவர் கிரிக்கெட் குறித்த பல கேள்விகளை என்னுடன் கேட்டறிந்தார். மேலும் அவரது இளம்வயதிலேயே கிரிக்கெட் குறித்த அணுகுமுறையை நான் பார்க்கையில், நிச்சயம் உயரிய இடத்திற்கு செல்லக்கூடியவர் என நான் உணர்ந்தேன். அதை நான் அவரிடமும் கூறியிருக்கிறேன்.”
“அவரது இளம்வயதில் பல உதவிகள் மற்றும் அறிவுரைகள் கூறியிருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமிதம் உள்ளது.” என்றார்.