இந்திய அணியில் கீழ் ஆர்டர்களில் நல்லமுறையில் நிலைத்தும் அதிரடியாகவும் ஆட அம்பதி ராயுடு சரியான வீரராக இருப்பார் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பான செயல்பாட்டை நோக்கி பேட்டிங் வரிசையில் கவனம் செலுத்தி வருகிறார். கீழ் ஆர்டர்களில் சிறப்பாக ஆட வீரர்களை தேடி வருகிறார்.
இதற்கு சரியான வீரராக அமபதி ராயுடு இருப்பார். அவர் யோயோ தேர்வில் தேர்ச்சி பெற்றால் நிச்சயம் இந்திய கீழ் ஆர்டர்களில் அவருக்கான இடம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அம்பதி ராயுடு ஐபில் போட்டியில் சென்னை அணிக்காக 16 போட்டிகளில் ஆடி 602 ரன்கள் குவித்தார். அதில் 5 அரைசதங்களும் ஒரு சதமும் அடங்கும். இவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 150 ஆகும்.
இதன்மூலம், இங்கிலாந்து செல்லும் ஒருநாள் போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றார். ஆனால், இங்கிலாந்து செல்லும் முன் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற தவறியதால் அணியில் இவருக்கு இடம் அளிக்கப்படவில்லை.
இதுவரை இந்திய அணிக்காக 34 ஒருநாள் போட்டிகளும், 6 டி20 போட்டிகளும் ஆடியுள்ளார் ராயுடு. இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பெற்றும், தேர்ச்சி பெறாமல் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டார்.
தற்போது ராயுடு குறித்து பேட்டிங் பயிற்சியாளர் கூறுகையில், ராயுடு மிடில் ஆர்டர்களில் சிறப்பாக ஆடக்கூடியவர். அவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக யோயோ தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அவர் தேர்ச்சி பெற்றால், நிச்சயம் அணியில் இடம்பெறுவார் என தெரிவித்தார்.