இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் மனைவியை போலீஸார் இன்று திடீரென கைது செய்தனர்.
இங்கிலாந்து செல்லும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம் பிடித்துள்ளார். தற்போது, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியிலும் இடம் பெற்று ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார்.
முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜாஹா. முகமது ஷமிக்கும், அவரின் மனைவிக்கும் இடையே கடந்த ஆண்டு திடீரென கருத்துமோதல் ஏற்பட்டது. முகமது ஷமி மீது சூதாட்டபுகார், வரதட்சணை கொடுமை, வேறுபெண்களுடன் தொடர்பு என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரின் மனைவி ஹசின் கூறினார்.
இது தொடர்பாக இருவரும் தனித்தனியாக போலீஸில் புகார் அளித்து, அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. ஆனால், ஷமி மீது சுமத்தப்பட்ட சூதாட்டப் புகாரை விசாரணை செய்த பிசிசிஐ அவர் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை எனக் கூறி மீண்டும் அணியில் வாய்ப்பளித்தது.
இந்நிலையில், உ.பி. மாநிலம் அம்ரோஹா நகரையடுத்து, ஷஹாஸ் அலி நகரில் முகமது ஷமியின் குடும்பத்தார் வசித்து வருகின்றனர். முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹா நேற்று நள்ளிரவு தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு ஷமியின் வீட்டுக் சென்றார்.
அங்கு ஷமியின் தாயுடனும், ஷமியின் சகோதரருடன் ஹசின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அத்துமீறி வீட்டுக்குள் நுழையவும் முயன்றுள்ளார். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஷமியின் தாய், சகோதரர் அம்ரோஹா போலீஸில் புகார் அளித்தனர். தங்கள் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்று, தகராறு செய்ததாக புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில், ஷமியின் மனைவி ஹசின் மீது ஐபிசி 151பிரிவின்கீழ் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வ்