நான் அனைத்துப் போட்டிகளிலும் ஆட வேண்டும் என்ற அவசியம் இல்லை என பகிரங்கமாக பேட்டி அளித்திருக்கிறார் ஆர்சிபி நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ்.
ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இந்த வருட ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்காததால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வீரர்களும் இந்தியாவிலிருந்தும் மற்றும் மற்ற நாடுகளிலிருந்தும் துபாய் மற்றும் அபுதாபி வந்தடைந்து, இந்த தொடருக்காக தீவிர பயிற்சியில் இறங்கி வருகின்றனர்.
இத்தனை வருடங்களாக ரசிகர்களின் ஆதரவு பெற்ற அணியாக இருந்து வரும் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்கிற கிண்டல்களும் வருத்தமும் ரசிகர்கள் மத்தியிலும் அணி வீரர்கள் மத்தியிலும் நிலவி வந்தது. இந்நிலையில் அதற்காக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் தீவிர பயிற்சியில் இறங்கி கோப்பையை வெல்லும் முனைப்பில் பெங்களூரு அணி இருக்கிறது.
ஐக்கிய அரபு நாடுகளின் சீதோஷண நிலைக்கு ஏற்ப ஒரு பேலன்ஸ் அணியை பெங்களூரு அணி நிர்வாகமும் அதன் கேப்டன் விராட் கோலியும் தேர்வு செய்திருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அணியின் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்வது குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ். அவர் தெரிவிக்கையில்,
“கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இதுதான் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணி என்று எப்போதும் குறிப்பிட இயலாது. ஒவ்வொரு மைதானம் மற்றும் எதிரணியை பொருத்து இது மாறிக்கொண்டே இருக்கும். அணி பயிற்சியாளரும் கேப்டன் விராட் கோலியும் சிறந்த வீரர்களை தேர்வு செய்வதில் தலையிடுவார்கள். மற்ற வீரர்களுக்கு அது குறித்த கவலை தேவையில்லை. அணியின் முன்னணி வீரர்களான நான், பார்த்தீவ் பட்டேல், டேல் ஸ்டேய்ன் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவோம் என்பதில் உறுதி இல்லை.
மைதானத்திற்கு ஏற்ப யார் தேவையோ? அவர்களை விராட் கோலி முடிவு செய்வார். நான் அனைத்துப் போட்டிகளிலும் ஆட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.” என பேட்டி அளித்துள்ளார்.