இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவானாக திகழ்ந்த அனில் கும்ப்ளே, தேர்வுக்குழு தலைவராக இருக்க வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவை இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தேசிய தேர்வுக்குழு தலைவராக ஆக்கவேண்டும் என முன்னாள் இந்திய தொடக்க பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார். கும்ப்ளே இதற்கான சரியான ஆள் என்று வீரேந்தர் சேவாக் நம்பைக்கை தெரிவித்துள்ளார்.
அனில் கும்ப்ளே 2016 மற்றும் 2017 க்கு இடையில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்ற பின்னர் அந்தப் பதிவியிலிருந்து விலகினார். கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட சண்டையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார், தற்போது அவர் பதவிக் காலத்திற்குப் நீட்டிப்பும் பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத் உள்ளார். இவரது தலைமையிலான தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர்.
இதுகுறித்து ஏற்கனவே விமர்சனம் எழும்பிய வண்ணம் உள்ளன. இதற்கு எம்எஸ்கே பிரசாத் பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் அனில் கும்ப்ளே தேர்வுக்குழு உறுப்பினராக வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு அனில் கும்ப்ளே சரியான நபராக இருப்பார் என்று நினைக்கிறேன். கும்ப்ளே சச்சின், கங்குலி, டிராவிட் போன்றோர்களுடன் ஒரு வீரராகவும், இளைஞர்களிடம் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.
2007-08-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரின்போது, கேப்டனாக இருந்த கும்ப்ளே என்னுடைய அறைக்கு வந்து, நீங்கள் அடுத்த இரண்டு தொடரில் அணியில் இருந்து நீக்கப்பட மாட்டீர்கள் என்றார். இதுபோன்ற நம்பிக்கை அளிக்கும் பதில் வீரர்களுக்கு தேவை.
தேர்வுக்குழு உறுப்பினருக்கான சம்பளத்தை அதகரிக்க பிசிசிஐ முன்வரவேண்டும். அப்படி செய்தால் ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள்’’ என்றார்.
உலகக் கோப்பை தோல்வி குறித்து சேவாக் கூறியதாவது:
அரையிறுதியில் 5-ம் நிலை வீரராக தோனி களமிறங்கியிருக்கவேண்டும். அதற்குப் பின்னால் பாண்டியா விளையாட வந்திருக்கலாம் என்றவர் மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான தொடர் குறித்தும் பேசியுள்ளார். இந்திய அணி நான்கு பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் மட்டுமே ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்கும். சமீபகாலமாகச் சரியாக விளையாடாமல் போனாலும் ராஹானேவைத்தான் நான் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார்.