ஒன்னும் தெரியாம இந்தியாவுக்கு போகதீங்க.. இந்திய அணியின் ஸ்பின்னர்களை எப்படி ஆடனும்னு சொல்லித்தரவான்னு கேட்டேன், ஆனால் என்னை மதிக்கல – மேத்தியூ ஹைடன் பேட்டி!

ஸ்பின்னர்களை இந்திய மைதானங்களில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நான் கற்றுத்தர தயாராக இருக்கிறேன். ஆனால் ஆஸ்திரேலியா அணியின் நிர்வாகம் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் அல்லவா? என்று கூறியுள்ளார் முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன்.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்தூர் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெற உள்ளது.

தொடருக்கு முன்னர் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் எதிர்கொள்வதற்கு பிரத்தியேகமாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் எதுவும் போட்டிகளில் எடுபடவில்லை.

முதல் டெஸ்டில் 16 விக்கெட்டுகள், இரண்டாவது டெஸ்டில் 16 விக்கெட்டுகள் என மொத்தம் 32 விக்கெட்டுகளை இந்திய ஸ்பின்னர்கள் கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய ஸ்பின்னர்களிடம் படுமோசமாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் விக்கெட் இழந்தார்கள்.

இந்தியாவிற்கு வருவதற்கு முன்னர், ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ளக்கூடிய முன்னாள் ஆஸி., வீரர் மேத்தியூ ஹைடன் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஸ்பின் ஆலோசகராக இருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் அதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் செவிசாய்க்கவில்லை.

ஹைடன், 2001 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் அபாரமாக விளையாடி அசத்தினார். அந்த தொடரில் இவரது சராசரி 110 ஆகும். அதற்கு அடுத்ததாக, 2004 ஆம் ஆண்டு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணியில் இவர் இருந்தார். 1969ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றிய தொடர் அதுவாகும்.

அதன்பிறகு தற்போது வரை இந்தியாவில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியதே இல்லை. இம்முறையும் அந்த வாய்ப்பை இழந்திருக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் ஒப்புக்கொண்டால் எந்த நேரமும் நான் வீரர்களுக்கு ஆலோசனை கூறத் தயாராக இருக்கிறேன் என்று தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் மேத்தியூ ஹைடன். அவர் கூறியதாவது:

“இரவு அல்லது பகல் எந்நேரம் என்னைக் கேட்டுக்கொண்டாலும், நான் எந்த பேட்ஸ்மேனுக்கு உதவவேண்டும் என்று சொன்னாலும் எனது முழு உதவியையும் கொடுக்க தயாராக இருக்கிறேன். இப்போது இந்த தருணமே கேட்டுக் கொண்டாலும், எனது பதில் சரி என்று தான் இருக்கும்.

முன்னாள் வீரர்களை இவர்கள் புறந்தள்ளுவது சரியாகப்படவில்லை. எனது காலகட்டத்தில் நாங்களே நேரடியாக முன்னாள் வீரர்களிடம் சென்று, இது எப்படி? அது எப்படி? என்று கேட்டுக்கொண்டே இருப்போம். இப்போது அணி நிர்வாகம் அதற்கு வழிவகை செய்வதே இல்லை என்று தெரிகிறது.

வீரர்களிடமிருந்து 100 சதவீத ஆற்றல் வெளிப்படவேண்டும் என்றால், குறைந்தபட்சம் அவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அதேபோல் வீரர்களிடமிருந்து அணி நிர்வாகம் எப்படி 100 சதவீதம் வெளியே கொண்டு வருவது என்று முயற்சிக்க வேண்டும். அதுதான் திருப்புமுனையாக இருக்கும்.” என்றும் பேசினார்.

Mohamed:

This website uses cookies.