அயர்லாந்துடன் இன்னும் சற்று நேரத்தில் முதல் டி20 போட்டி தொடங்குகிறது. முன்னதாக திங்களன்று இந்திய அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வழக்கம்போல் வலையில் இந்திய வீரர்களுக்குப் பந்து வீசினார்.
இது குறித்து பிசிசிஐ தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அர்ஜுன் டெண்டுல்கர் தலைமைப் பயிற்சியாளருடன் ஆலோசனை பெற்ற 2 புகைப்படங்களையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கருக்கு மட்டும் ஏன் முன்னுரிமை? இந்தியாவில் எத்தனையோ பவுலர்கள் எம்.ஆர்.எஃப் வேகப்பந்து அகாடமியில் இருக்கும் போது அர்ஜுன் டெண்டுல்கருக்கு மட்டும் எப்படி தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு வீச வாய்ப்பளிக்கப்படுகிறது என்ற நெபோடிசம் பற்றிய கேள்விகளுக்கு இடையே, அர்ஜுன் திங்களன்று தோனி, ரெய்னாவுக்கு தன் இடது கை வேகப்பந்து வீச்சை வீசினார்.
ஆனால் ஷார்ட் அண்ட் வைடாக வீச ரெய்னா சில ஷாட்களை ஆஃப் திசையில் விளாசினார், சில ஷாட்களைத் தூக்கியும் ஆஃப் திசையில் அடித்தார், தோனியும் சில பந்துகளை அர்ஜுன் டெண்டுல்கரை தனக்கேயுரிய பாணியில் தடுத்தும் அடித்தும ஆடினார். ஆனால் ஓரிரு பந்துகள் அவரது ஹிட்டிங் வளையத்துக்குள் விழ தூக்கி வெளியே அடித்தார்.
அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயம் தன் பவுலிங் சரியாக அமையாதது குறித்து ஏமாற்றமடைந்திருப்பார், ஆனால் தோனி, ரெய்னா போன்ற மோதிரக்கையினால் குட்டுபடுவது ஒரு சிறந்த பாடமாக அவருக்கு அமைந்திருக்கும் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.
ஆனால் பொதுவாக வலையில் வீரர்களை அச்சுறுத்தும் விதமாக வீச மாட்டார்கள், அப்படி வீசினால் அது குறிப்பிட்ட பேட்ஸ்மென் கேட்டு வீசுவதாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.