மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் சச்சினின் மகன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் செய்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் நடைபெறவிருக்கிறது. ஐபிஎல் தொடரின் போட்டிக்கான அட்டவணைகள் ஏற்கனவே கடந்தவாரம் வெளியிடப்பட்டு விட்டன. இதற்காக ஒரு மாத காலம் முன்பே கிட்டத்தட்ட அனைத்து இந்திய வீரர்களும் இந்தியாவில் இருந்தும், வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக தங்களது நாடுகளிலிருந்து துபாய்க்கும் வந்தடைந்து, அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின்னர் பயிற்சிக்கு திரும்பி இருக்கின்றனர்.
தீயாக அனைத்து வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய தினம் வீரர்கள் பயிற்சியை முடித்துவிட்டு நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில் அதிர்ச்சி தரும் விதமாக மும்பை வீரர்களுடன் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் காணப்பட்டார். இது மட்டுமல்லாது சில பயிற்சி புகைப்படங்களிலும் அவர் தென்படுகிறார்.
இந்த வருட ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக அர்ஜுன் டெண்டுல்கர் ஏலத்தில் பங்கேற்பார் என செய்திகள் வந்தன. ஆனால் ஏலத்தின் போது அவர் பங்கு பெறவில்லை. இந்நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் அவரைப் பார்க்கையில் அவர் நேரடியாக மும்பை அணிக்காக எடுக்கப்பட்டு இருக்கிறாரா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
இன்னும் சிலர் இவர் பயிற்சியின்போது வளைப்பயிற்சி பந்துவீச்சாளராக எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவிருக்கும் மும்பை அணி வீரர்களின் முழு பட்டியல் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும். அது வெளியிடப்பட்ட உடன் அர்ஜுன் டெண்டுல்கர் அணியில் இருக்கிறாரா? இல்லையா? என்பது உறுதியாகிவிடும்.
2020 ஐபிஎல் தொடரின் துவக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.