வேற லெவல்… புலிக்கு பிறந்தது புனையாகுமா..? தந்தையை போலவே தனது கிரிக்கெட் வாழ்க்கையையும் ஆரம்பித்த அர்ஜூன் டெண்டுல்கர்
ரஞ்சி டிராபியில் கோவா அணிக்காக விளையாடி வரும் அர்ஜூன் டெண்டுல்கர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் நடத்தப்பட்டும் உள்ளூர் தொடர்களில் முக்கியமான தொடரான ரஞ்சி டிராபி தொடர் 13ம் தேதி துவங்கியது. இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர், கோவா அணிக்காக விளையாடி வருகிறது.
கோவா அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. 13ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய கோவா அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான சுமிரன் அமோன்கர் 9 ரன்னிலும், சுனில் தேசாய் 27 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சுயஸ் பிரபுதேசாய் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 416 பந்துகளில் 212 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்னேகல் சுஹாஸ் 59 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய சித்தேஸ் லாட் 17 ரன்களிலும், எக்னாத் கெர்கர் 3 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
இதனையடுத்து களத்திற்கு வந்த அர்ஜூன் டெண்டுல்கர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து, தனது கிரிக்கெட் பயணத்தை துவங்கியுள்ளார். மொத்தம் 207 பந்துகளில் 120 ரன்கள் குவித்த அர்ஜூன் டெண்டல்கர், அவரது தந்தையை போலவே தனது கிரிக்கெட் பயணத்தையும் துவங்கியுள்ளார்.
1988ஆம் ஆண்டு முதல் ரஞ்சிக்கோப்பை போட்டியை குஜராத் அணிக்கு எதிராக மும்பை அணியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், 4ஆவது வீரராக களமிறங்கி 100 ரன்களை விளாசி, அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார்.
இதன் மூலம், 34 வருடங்களுக்கு பிறகு தந்தை செய்த சாதனையை 7ஆவது வீரராக களமிறங்கி 120 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளார் அர்ஜூன் டெண்டுல்கர்.