ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 முறை இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. 5 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளது.
தற்போது ,சர்வதேச 20 ஓவர்கள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் காரணமாக டெஸ்ட் போட்டிகளுக்கு ஆதரவு குறைந்து வருகிறது.
இந்நிலையில், ஆஷஸ் தொடர் நடைபெறுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் அழியாமல் உள்ளது என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கங்குலி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 251 ரன்கள் வித்தியாத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டம் டிரா ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதில் அளித்த ஹர்பஜன், கங்குலி கருத்தை ஆமோதித்து ட்வீட் செய்கையில், “அணிகள் பலமாக இருந்தால்தான் தரநிலைகளைப் பராமரிக்க முடியும். ஆனால் துயரகரமாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சொல்லப்போனால் நியூஸிலாந்தில் நியூசிலாந்து 4 அணிகள்தான் வலுவான அணிகளாகத் திகழ்கிறது ” என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.
ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் உதை வாங்காத அணியே கிடையாது, ஹர்பஜன் கூறும் வலுவான இந்திய அணி கூட அங்கு 2-1 என்று தோல்வி கண்டதைத்தான் பார்க்க முடிந்தது.
மேலும் சமீபமாக பாகிஸ்தான், இலங்கை அணிகள் இங்கிலாந்தில் ஆடியதும், மே.இ.தீவுகள் இங்கிலாந்தை வீழ்த்தியதும் என்ன தரநிலைகள் அந்தஸ்தைப் பெறாதா?
ஐசிசி பெரும்பகுதி வருவாய்களை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துதான் பகிர்ந்து கொள்கின்றன. சமத்துவமான ட்ரீட்மெண்ட் இல்லாததே டெஸ்ட் கிரிக்கெட்டில் தரநிலைகள் இறங்கக் காரணம் என்று யாராவது ஹர்பஜன் சிங்கிற்குக் கூறுவார்களா?